மதுரை மணிக்குறவர் பட விமர்சனம்
ஹரிக்குமார் மதுரை மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கும் பிஸினஸ் செய்து வருகிறார். மார்க்கெட்டில் நடக்கும் தகராறில் ஆரம்பித்து, குளத்தை மீனுக்காக ஏலம் எடுக்கும் வரையிலும் ஹரிக்குமாருக்கும் ஏரியா எம்.எல்.ஏ. சுமனுக்குமான மோதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் ஹரிக்குமாருக்கும் தனது மாமன் மகளுக்குமான திருமண ஏற்பாடு நடக்க, தாலி கட்டும் நேரத்தில் சுமனின் சூழ்ச்சியால் திருமணம் நின்று விட, ஏற்கனவே மணமேடை வரை வந்து திருமணம் நின்றுபோன மாதவி லதாவை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹரிக்குமார். புதுமணத் தம்பதிகள் தனியாக வரும் நேரம் பார்த்து சுமன், சரவணன், காளையப்பன் உள்ளிட்ட வில்லன் கோஷ்டி ஹரிகுமாரை கொன்று தங்கள் ரத்த வெறியை தீர்க்கிறார்கள்.
இதன்பிறகு புதிய திருப்பமாக ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் அந்த பகுதி காவல்நிலைய இன்ஸ்பெக்டராக வருகிறார். யார் அவர்? இறந்து போன ஹரிக்குமாருக்கும் இவருக்கும்என்ன தொடர்பு.? இறந்து போன ஹரிக்குமாரை கொன்ற வில்லன்கள் பழி தீர்க்கப்பட்டனரா? என்பது பிற்பகுதி விறுவிறு.
நாயகன் ஹரிக்குமார் அதிரடி காட்சியில் கூடுதல் வேகம் காட்டுகிறார். அதற்கு அந்த ஆஜானுபாகுவான தோற்றமும் கைகொடுக்கிறது. மாமா மகளுடன் இழையோடும் அந்த மென்மை அன்பில் ‘மாமா பையன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்று எண்ண வைக்கிறார். எதிரிகளிடம் குரல் உயர்த்தி பேசும் இடங்கள் ரகளை என்றால், போலீஸ் அதிகாரியாக வந்து அடிதடி துவம்சம் செய்யும் இடங்கள் ரகளையோ ரகளை.
அழகான நாயகி மாதவி லதா நடிப்பிலும் ஈர்க்கிறார். நாயகனின் முறைப்பெண்ணை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். வில்லன் கோஷ்டிகளில் சுமன், சரவணன் வரிசையில் தயாரிப்பாளர் காளையப்பனும் பயமுறுத்துகிறார். குணசித்ரத்தில் டெல்லி கணேஷூம் பருத்தி விரன் சுஜாதாவும், ராஜககபூரும் மனதோடு இனிதாகிறார்கள்.
காமெடிக்கு கஞ்சாகருப்பு, அனுமோகன், போண்டாமணி கூட்டணி. முழுநேர மதுப்பிரியராக வரும் எம்.எஸ்,பாஸ்கர், கிடைத்த கேப்பில் எல்லாம் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும்் ராதாரவி-கவுசல்யா தொடர்பான பிளாஷ்பேக் நெஞ்சில் நிற்கிறது.
குடும்ப பந்தம், பாசம் என்று போகும் கதையை அடிதடிக்கு திருப்பி படம் முடியும்வரை ரசிகனை உற்சாகமாக வைத்திருக்கிறார், இயக்கிய ராஜரிஷி.
