ஓணான் பட விமர்சனம்

களவாணி வில்லன் திருமுருகனை நாயகன் ஆகியிருக்கும் படம்.
திருமுருகன் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றதற்காக கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தி வருவதோடு டைட்டில் முடிகிறது.
முதல் காட்சியில் காளி வெங்கட் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையே படமாக திரையில் விரிகிறது.
திருமுருகன் ஒரு கிராமத்திற்கு விலாசம் ஒன்றை தேடி வர, வந்த இடத்தில் பூ ராமுவை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அனாதை என்று தெரிந்ததும் திருமுருகனை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் பூ ராமு.
அந்த வீட்டில் பூ ராமு தம்பதியுடன் அவர்களின் மகனான காளி வெங்கட் மனைவி குழந்தைகளுடனும், திருமணமாகாத மகள் ஷில்பா மஞ்சுநாத்தும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் திருமுருகன் மீது ஷில்பாவுக்கு காதல் வர, இது பூராமு அண்ட்கோவுக்கு தெரிய வர, உடனே திருமணம். தமபதிகளின் முதலிரவின்போது தான் தன் குடும்பத்தையே கொலை செய்த மனநோயாளி திருமுருகன் என்பது காளி வெங்கட்டுக்குத் தெரிய வர…
அதை வெளியில் சொன்னால் திருமுருகன் எல்லோரையும் கொன்று விடுவார் என்று பயந்து மூடி மறைக்கிறார், காளி.
அந்த ஊருக்கு திருமுருகன் வந்த காரணம் என்ன..? அவரிடம் இருந்து காளி வெங்கட்டின் குடும்பம் தப்பியதா..? முதல் காட்சியில் போலீசில் சரண் அடையும் காளி வெங்கட்டுக்கும் திருமுருகனுக்கும் எற்கனவே உள்ள சம்பந்தம் என்ன? ‘ என்ற கேள்விகளுக்கு விடை, எதிர்பாராத கிளைமாக்ஸ்.
நாயகனாக புரமோஷன் திருமுருகனுக்கு. மனநோயாளியாகவும் கொலையாளியாகவும் நடிப்பால் தன் கேரக்டரை அடையாளப்படுத்துகிறார். கிளைமாக்சில் அதுவரை பார்த்திராத திருமுருகன் இன்னொரு ஆச்சரியம்.
காமெடியனாக ரசித்த காளி வெங்கட்டுக்கு இது முக்கிய படம். அவரது வில்லமுகம் படத்தின் பலமாகவும் ஆகிப்போகிறது.
ஷில்பா மஞ்சுநாத் அழகில் ஜொலிக்கிறார்….அப்படியே நடிப்பிலும். பூராமு நடிப்பால் முழுப்படத்திலும் நிறைந்து நிற்கிறார்.
காமெடிக்கு சிங்கம்புலி.
திருமுருகனின் முதல் மனைவியாக வரும் சனுஜா சோம்நாத் தோற்றத்தில் மிடுக்கும் நடிப்பில் இயல்புமாய் வசீகரிக்கிறார்.
கொலைப்படமாக தொடங்கி மன்னிப்பதே மனித மாண்பு என்று முடித்ததில் இயக்குனர் சென்னன் மனிதநேய மன்னனாகி இருக்கிறார்.
