பிளான் பண்ணி பண்ணணும் பட விமர்சனம்

ஐ.டி. ஊழியர்களான ரியோராஜூம் பாலசரவணனும் நண்பர்கள். தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை அவர்கள் ஏற்பாடு செய்ய, அதில் சினிமா நடிகை ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள்.. அதில் ஆரம்பிக்கிறது, பிரச்சினை. நடிகைக்கு தரவேண்டிய பணம் காணாமல் போக, கூடவே பாலசரவணனின் தங்கையும் காணாமல் போக, தேடும் படலம் ஆரம்பமாகிறது. இந்த தேடலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை காமெடி முலாம் பூசி சொன்ன விதத்தில் ஒர்க்அவுட் ஆகிறது, இந்த பிளான்.
நாயகனாக வரும் ரியோராஜ் தனது கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்திருக்கிறார். நாயகி ரம்யா நம்பீசன் அனுபவ நடிப்பில் சர்வ சாதாரணமாக நம் மனதில் கலந்து போகிறார்.அப்பாவி பணக்கார மாப்பிள்ளையாக சித்தார்த் விபின், நாயகியின் அப்பாவாக ஆடுகளம் நரேன், அம்மாவாக ரேகா, நாயகனின் அம்மாவாக விஜி சந்திரசேகர், அப்பாவாக சந்தானபாரதி, வில்லனாக மாரிமுத்து என ஆளுக்காள் தங்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள். இதில் வில்லன் மாரிமுத்து தான் பாவம். கடைசியில் என்னவானார் என்றே தெரியவில்லை.
ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். பாலசரவணனின் தங்கையாக வரும் பூர்ணிமாதேவி அந்த நீண்ட நெடும் வசனத்துக்கு தியேட்டரில் கரகோஷம் வாங்குகிறார்.
ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் காதுகளுக்கு இனிமை. இயக்கிய பத்ரி வெங்கடேஷ் காமெடி ஒன்றையே பிரதானமாக்கி அமைத்த திரைக்கதை திரை அலங்காரத்தில் இன்னும் ஜொலிக்கிறது.
அந்த விஷபாட்டில் காமெடியை அத்தனை ‘ஜவ்வாக’ நீட்டியிருக்க வேண்டாம்.
