மருத்துவத்துறையில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் சத்யராஜ், திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்காக குற்றவாளிகளைக் தேடிப்பிடித்துத் தண்டிக்கிறார். இதை திரில்லர் பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன்.

மகள் மீது பாசம் கொட்டும் தந்தை சத்யராஜ். அதே மகளுக்கு நேர்ந்த வன்கொடுமைக்காக பழி வாங்கப் புறப்படும் கதை. மகளின் நிலைக்காக மனம் கலங்குவதும், கோர்ட்டில் நியாயம் கிடைக்காமல் கலங்குவதுமாய் வழக்கமான நடிப்பில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். வில்லனின் தவிப்பை ரசிப்பதில் பழைய வில்லன் சத்யராஜ் தெரிகிறார். படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரீஸ் உத்தமன் கவர்கிறார்கள்.

சத்யராஜின் மகளாக ஸ்மிருதி வெங்கட் அப்பா பாசத்தில் கவர்கிறார். பாதிக்கப்பட்ட நிலையில் கதறும் இடத்தில் நடிப்பும் வருகிறது. அவரது ஜோடியாக வரும் யுவன் மயில்சாமிக்கு மனதில் நிற்கும் பாத்திரம்.

சில காட்சிகளே வந்தாலும் சார்லி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் நிறைவு.

பெண்களை தங்கள் அதிகாரத் திமிரில் சிதைக்கும் ஆண்களுக்கு டாக்டர் சத்யராஜ் கொடுத்த தண்டனை சரி தான் என்று ரசிகனை எண்ண வைக்கிற விஷயத்தில் ஜெயித்திருக்கிறார், இயக்கிய தீரன்.