திரை விமர்சனம்

லேபர் திரைவிமர்சனம்

லேபர் = திரைவிமர்சனம்
தயாரிப்பு : ராயல் ஃபர்ச்சுனா கிரியேஷன்ஸ்
எழுத்து & இயக்கம் : சத்தியபதி
நடிகர்கள் : முருகன் ஆறுமுகம், ஜீவா சுப்ரமணியம், சரண்யா ரவிச்சந்திரன், முத்து, கயல், பெரோஸ் கான் உள்ளிட்ட பலர்.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கும் திரைப்படம் ‘லேபர்’.

கட்டிடம் கட்டும் தொழிலில் மேஸ்திரியாக பணியாற்றும் நாயகன், தன் மகனை இன்ஜினியராக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் தன் சக்திக்கு மீறி தனியார் கல்லூரியில் பணம் செலுத்தி படிக்க வைக்கிறார். இதற்காக பல இடங்களில் கடன் வாங்குகிறார். அத்துடன் தன் மகளின் திருமண செலவிற்காக தனியார் நிதி நிறுவனத்திடம் சீட்டுப்பணம் கட்டுகிறார்.

போராட்டமான வாழ்க்கையில் நிதி நிறுவனம் நடத்தி, சீட்டு பிடித்த தம்பதிகள் பணத்தை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் அந்த சீட்டு நிறுவனம் நடத்திய தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். போலீஸ் விசாரணையில் இவர்களிடம் வசூல் செய்த பணத்தை வைத்து அந்த தம்பதிகள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் விவரம் தெரிய வருகிறது.

இந்த மேஸ்திரிக்கு கீழ் பணியாற்றும் கட்டிட தொழிலாளர் தம்பதிகளாக நடிகர் முத்து மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை இன்றைய கட்டிட தொழிலாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையாக பதிவு செய்திருக்கிறார்கள். எதிர்பாராத விபத்தில் முத்து இறந்து விட, அவரது மனைவியான சரண்யா, வட இந்தியாவிலிருந்து இங்கு பணியாற்ற வருகை தந்திருக்கும் தன் கணவனின் நண்பனுடன் மீதமிருக்கும் வாழ்க்கையை கழிக்க கரம் பிடிப்பது போல் உச்சகட்ட காட்சி அமைந்திருப்பது ரசிகர்கள் எதிர்பாராதது.

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை விரிவாக விவரித்திருக்கும் இயக்குநர், காட்சி கோணங்களாலும், மெதுவாக நகரும் திரைக்கதையாலும் பார்வையாளர்களிடத்தில் சோர்வை ஏற்படுத்துகிறார்.

நடிகை சரண்யா ரவிச்சந்திரன் அனுபவமிக்க நடிப்பால் ரசிகர்களிடத்தில் கவனம் ஈர்க்கிறார்.

வட இந்தியாவிலிருந்து வருகை தரும் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள மறைவிடத்தில் வசித்துக் கொண்டே வாழ்க்கை நடத்தும் எதார்த்தத்தை காட்டும் போது பார்வையாளர்களின் கண்களில் ஈரம் கசிகிறது.

பல இடங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெறும் இயக்குநர், மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும் இலக்கில்லாமல் பயணிக்கும் திரைக்கதையால் அயர்ச்சியையும் உண்டாக்குகிறார்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இயக்குநருக்கு வலு சேர்ப்பது போல் இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதால், மலையளவு பாராட்ட மனமில்லாவிட்டாலும், கடுகளவிற்கு பாராட்டலாம்.

லேபர் – குறைவாக கொடுக்கப்பட்ட கூலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *