திரை விமர்சனம்

ஆனந்தம் விளையாடும் வீடு பட விமர்சனம்

30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய குடும்பம் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக வசிப்பதற்காக ஒரு வீட்டை கட்ட முற்படுகிறார்கள். இதற்கு இடையூறு வில்லன் மூலமாக வர, தடைகளைத் தாண்டி அவர்களால் வீட்டை கட்ட முடிந்ததா என்பது கதை.
பெரியவர் ‘ஜோ மல்லூரி’க்கு இரண்டு மனைவிகள். இருவர் வழியிலும் 5 பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் மனைவி வழியில் மூத்த மகனாக சரவணன் இருக்க, இளைய மனைவிக்கு மூத்த மகனாக சேரன் இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து எல்லோருக்குமாக ஒரு வீட்டைக் கட்ட முற்பட, தீய எண்ணம் கொண்ட டேனியல் பாலாஜி, சேரனின் தம்பிகளை தூண்டி விட்டு அந்த வீடு கட்டும் முயற்சிக்கு தடை ஏற்படுத்துகிறார். அதையெல்லாம் தாண்டி சரவணன்- சேரனால் வீடுகட்ட முடிந்ததா என்பது நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.

மூத்த அண்ணனாக வரும் சரவணன் அந்த அமைதி ஆழ்கடல் நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். இளைய குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சேரன் இன்னொரு ஆச்சரியம். தன் தம்பிகளை அவர்கள் போக்கில் விட்டால் சிதறி விடுவார்கள் என்று அன்பால் அவர் ஆகர்ஷிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் படத்தின் பலமும் கூட.
பெரியண்ணன் சரவணனின் மகனாக கவுதம் கார்த்திக். குடும்பம் இரண்டு பட்ட வேளையில் தங்கை வெண்பாவின் சீமந்தத்திற்கு தன் சித்தப்பாக்களை அழைக்க வரும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ஷிவாத்மிகா (டாக்டர் ராஜசேகர் – நடிகை ஜீவிதா தம்பதிகளின் வாரிசு). நடிப்பிலும் நடனத்திலும் கவர்கிறார். நாயகியே உன் வரவு தமிழ்த்திரைக்கு நல்வரவாகட்டும்.
நல்ல தம்பிகளில் விக்னேஷ், சினேகனும் அடங்காத தம்பிகளில் சௌந்தரராஜனும் சிறப்பு. வில்லனாக டேனியல் பாலாஜி சாலப்பொருத்தம்.
சித்து குமாரின் இசையில் ‘சொந்தமுள்ள வாழ்க்கை’ பாடல் படத்தின் ஜீவன். பாலபரணியின் கேமரா அாகான கதைக்கு இன்னும் அழகு..
கூட்டுக்குடும்ப உணர்வை உயிரான காட்சிப்படுத்தல் மூலம் சொல்லி உறவுகளை மேன்மைப்படுத்தியிருக்கும் இயக்குனர் நந்தா பெரியசாமியை தமிழ் சினிமா கொண்டாட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *