83 பட விமர்சனம்
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து செல்கிறது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறி விடும் என்று கூறி வந்த நிலையில், அவர்கள் கணிப்பை பொய்யாக்கி அரையிறுதிக்குள் செல்கிறது.
இறுதிப்போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பதை விறுவிறு திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார், ரன்வீர் சிங்.அவரது மனைவியாக வரும் தீபிகா படுகோனே, கணவரை ஊக்குவிக்கும் கேரக்டரில் கச்சிதம். மற்ற வீரர்களாக வருபவர்களில் ஜீவா காமெடி போர்ஷனை எடுத்துக் கொண்டு ரசிகர்கள் சிரிக்க வகை செய்கிறார்.
கிரிக்கெட்டர்களின் கனவாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்திற்குள் இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்படும் போது, ‘35 வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் கிடைச்சுது, ஆனால் இன்னும் மரியாதை கிடைக்கவில்லை’ என்ற வசனம் நெஞ்சில் ஆணியடிக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் சாயலில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததற்கு இயக்குனர் கபீர்கானுக்கு பொக்கே. 1983-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை திரைப்படத்தோடு காட்சிப்படுத்தியது படத்தோடு ரசிகனை இன்னும் நெருக்கமாக்கி விடுகிறது.
அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பக்கியத்தின் பின்னணி இசையும் இந்த விளையாட்டு படத்தை இன்னும் வீரியமாக்கி விடுகின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பரபரப்பும் படபடப்புமான திரில்லர் அனுபவம் ரசிகனுக்கு.