திரை விமர்சனம்

புஷ்பா பட விமர்சனம்

செம்மரக் கடத்தல் வேலைக்குச் செல்லும் ‘புஷ்பா’, தடைகளைக் கடந்து, பல வில்லன்களை ஏறி மிதித்து, டானாக விஸ்வரூபம் எடுப்பதே படம்.
செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் அல்லு அர்ஜுன். செம்மரங்களை போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு லாவகமாக கடத்திச் செல்லும் அல்லு அர்ஜுனின் ‘தில்’லை வியந்து அவரை தனது தொழில் பார்ட்னராகவே சேர்த்துக் கொள்கிறார், அஜய் கோஷ்.
இதன் பிறகு தான் சிக்கல். அஜய் கோஷின் இன்னொரு பார்ட்னரான சுனில், அல்லு அர்ஜுனுக்கு ‘செக்’ வைக்கிறார். அதை அல்லு அர்ஜுன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது படத்தின் அதிரடி கதைக்களம்.
படம் முழுக்கவே அல்லு அர்ஜுனின் நடிப்புக் கொடி தான் பறக்கிறது. தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், அனல் வீசும் பஞ்ச் வசனங்கள், மனதில் பட்டதை கெத்தாக செய்யும் துணிச்சல் என ஒரு பக்கா அதிரடி ஹீரோவாக திரைஆளுமை செய்கிறார். நடனக் காட்சிகளில் லாவகம், ஸ்டண்ட் காட்சிகளில் ஆக்ரோஷம் என மொத்தப் படத்திலும் முன்னிற்கிறார்.

நாயகி ராஷ்மிகா மந்தனா வழக்கம் போல் தன் இருப்பை கவர்ச்சியிலும் கொஞ்சம் நடிப்பிலும் நிறைவு செய்கிறார்.
டஜன் கணக்கான வில்லன்களில் மங்களம் ஸ்ரீனுவாக வரும் சுனிலும், கொண்டா ரெட்டியாக வரும் அஜய் கோஷும் மிரட்டுகிறார்கள். போலீஸ் அதிகாரி பகத் பாசில் கம்பீரம்.

சமந்தா ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஜிலீர் பண்ணிப் போகிறார்.

வழக்கமான கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் சுகுமார். படத்தின் நீளம் அதிகம் என்றாலும் திரைக்கதையின் சுவாரஸ்யம் ரசிகனை இருக்கையோடு கட்டிப் போட்டு விடுகிறது. இரண்டாம் பாகம் இருப்பதால் அடுத்த எதிர்பார்ப்புக்கு மனசை இப்போதே தயார் செய்து விடுகிறார்கள்.
கேங்ஸ்டர் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மிரோஸ்லா கூபா. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் ‘சாமி சாமி’ பாட்டு கலக்குது சாமி.
புஷ்பா, புஸ்வாணமில்லை. அதிர்வேட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *