கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது படக்குழுவினரை கைது செய்த இலங்கை கடற்படை
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா இயக்கியுள்ள “மீண்டும்” படக்குழுவினர் இலங்கை கடற்படையால் கைதானது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த படத்தை சரவணன் சுப்பையா இயக்கியிருந்தார். தற்போது இவர் பல வருட இடைவெளிக்கு பிறகு ‘மீண்டும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அஜித் பட இயக்குனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது. இந்த படத்தில் கதிரவன் நாயகனாக நடிக்க, நாயகியாக அனகா நடித்துள்ளார். இவர் சந்தானத்தின் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படக்குழுவினர் தமிழக கடல் பகுதியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர். படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் கைதானதைத் தொடர்ந்த படப்பிடிப்பு நடத்துவதில் தடை ஏற்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு அங்கிருந்து மீண்டு வந்த படக்குழு, இப்போது படத்தை முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
படம் பற்றி இயக்குனர் சரவணன் சுப்பையா கூறுகையில், ‘‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெறும் நட்சத்திரங்கள் யாரும் உடை அணிந்திருக்க மாட்டார்கள். கதைப்படி அந்தக் காட்சி அவசியம். அதனால் சென்சார் அனுமதி கிடைக்காது. அதோடு பேமிலி ஆடியன்ஸ் படத்துக்கு வர மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இதையெல்லாம் தாண்டி ரசிகர்களை திரைக்கு வரவழைக்கிற திரைக்கதை தான் படத்தின் பலம். அந்த நம்பிக்கையில் சொல்கிறேன். படத்தின் தலைப்பை போலவே மீண்டும் மீண்டும் வருவார்கள். தமிழ் சினிமாவில் நிச்சயம் இது ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்’’ என்கிறார்.
