2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, சில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அப்போது, ரூபாய் நோட்டுகள் மீது பேனா மற்றும் பென்சிலால் எழுதப்பட்டிருந்தால் அந்த நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பால், தற்போதும் எப்படிப்பட்ட துயரங்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள் என்பதை விரிவாக பேசும் படம் தான் ‘ரூ 2000’.

பேனாவால் எழுதப்பட்ட 2000 ரூபாய் நோட்டால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிக்காக, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வரை நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்கும் வழக்கறிஞரின் வாதங்களும், அவருடைய ஒவ்வொரு கேள்வியும் மனசாட்சியுள்ளவர்களின் நெஞ்சில் அறைந்த ஆணி.

வழக்கறிஞராக நடித்திருக்கும் பாரதி கிருஷ்ணகுமாரின் தெளிவான வசன உச்சரிப்பு, சாட்சிகளை விசாரிக்கும் தோரணை தோழர் பாலன் என்ற அவர் ஏற்ற அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்.

ஏழை விவசாயியாக வரும் அய்யநாதன், சாமானியர்களின் வலிகளை நடிப்பில் உணர வைக்கிறார்.

ஆணவக் கொலையால் தனது காதல் மனைவியை இழந்து தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும் ருத்ரன் பராசு அந்த சோகத்தை நமக்கும் கடத்தி விடுகிறார்.
ஆணவக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷர்னிகா, அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ், நீதிபதிகளாக வரும் ஓவியா, தியாகு இயல்பு நடிப்பில் கதைக்குள் நம்மை ஈர்த்துக் கொள்கிறார்கள்.
மத்திய அரசு அறிவித்த பிறகும் ஏ.டி.எம். மையங்களில் பேனாவால் எழுதப்பட்ட மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகள் வருவது எப்படி என்ற கேள்விக்கு நீதிமன்றத்தில் எழுப்பும் ஒவ்வொரு கேள்வி மூலமாகவும் இயக்குனர் அடித்திருப்பது சம்மட்டி அடி.