சினிமா செய்திகள்

அகடு திரை விமர்சனம்

அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சுற்றுலா வரும் 4 நண்பர்கள் அங்குள்ள விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். அதே இடத்திற்கு தங்கள் பத்து வயது மகளுடன் சுற்றுலா வரும் டாக்டர் தம்பதிகள், நண்பர்கள் தங்கியிருக்கும் அதே விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். மறுநாள் காலை டாக்டர் தம்பதிகளின் மகளும் நான்கு நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக… அவர்களுக்கு என்ன ஆனது என்பதை காவல்துறை கண்டறிய முயல…முடிவு திரில்லர் கலந்த சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ்.

காணாமல் போனவர்களை போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கும் காட்சிகளில் இயக்குனரின் அணுகுமுறை புதுசு. அதனால் கிளைமாக்ஸ் வரை திரில்லான ரசனையை உணர முடிகிறது.
சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான நடிப்பில் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வித்தியாசமான டாக்டர் கேரக்டரில் அஞ்சலி நாயர் ரொம்பவே பொருந்திப் போகிறார். அவரது மகளாக நடித்திருக்கும் ரவீனாவின் பயந்த கண்களும் பரிதவிப்பும் ஆசம்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய் பல இடங்களில் கொடுத்த காசுக்கு மேல் ஓவராக நடித்து கடுப்பேற்றுகிறார்.

ஜான் சிவநேசனின் இசை பிற்பகுதியில் திகிலை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல அப்படியொரு மிரட்டல். வனப்பகுதியின் அழகை கேமரா மூலம் நமக்கு கடத்தும் வேலையை செவ்வனே செய்து விடுகிறார், ஒளிப்பதிவாளர் சாம்ராட்.
குறிப்பிட்ட ஒரு களத்தில், குறைந்தபட்ச கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழுமையான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை அதுவும் அழுத்தமான மெசேஜோடு தந்த இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், தமிழ் சினிமாவுக்கு நல்வரவு.