கட்டம் சொல்லுது… திரை விமர்சனம்

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படமே ‘கட்டம் சொல்லுது.’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.எழிலனே நாயகனாகவும் நடித்து இருக்கிறார். நேர்த்தியான திரைக்கதையும் நட்சத்திரத் தேர்வும் படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக்கி விடுகின்றன.
படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன், சகுந்தலா, ராஜா அய்யப்பன், மணிவாசகம், ராணி, ஜெயா என பலரும் திரைக்கு புதுமுகங்கள். ஆனால் நடிப்பில் கேரக்டர்களாகவே மாறி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
என்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடும் இளைஞனுக்கு எப்படியும் நாலு நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா. அப்படியே இதிலும் இருக்கிறார்கள். ஆனால் படத்தின் சுவாரசியமே இவர்கள் தான். உதவாக்கரை, உருப்படாதவன் போன்ற கட்டங்களை தாண்டி நண்பர்களே ஒருவருக்கு மற்றவர் உதவும் கேரக்டர்கள் படத்தின் ஆகச்சிறந்த பலம். காமெடியைும் விட்டு வைக்கவில்லை. மகனை எப்போது பார்த்தாலும் கன்னத்தில் பளார் விடும் அந்த போலீஸ் அப்பா கேரக்டரில் வரும் சின்னதுரை புதுமுகம் என்று தலையில் அடித்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
மகனை தேடி வந்த நண்பனை இரண்டு நிமிஷம் என்று உட்கார வைத்து தத்துவம் பேசியே காலி பண்ணும் அந்த அப்பா கேரக்டரும் ‘ஆஹா’ ரகம்.
போலி சாமியார்களின் சைக்காலஜியை இடம் பார்த்்து தோலுரித்து இருக்கிற இயக்குனருக்கு ஒரு ஹாட்ஸ் அப்.
மகளுக்கு மாப்பிள்ளை தேடும் தீபாவிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் திருமணமே நடக்காது என்று சாமியாடும் பெண் கூறி விட… இதனால் ஒரு ஜோசியரை பார்த்து ஜாதகப் பொருத்தம் பார்க்க செல்கிறார், தீபா. அங்கு தனது நண்பனுக்கு ஜாதகம் பார்க்க உத்ராபதியும் (நடிகர் திடியன்) வருகிறார். அங்கு தீபாவுக்கும் திடியனுக்கும் இடையே உருவாகும் உரையாடலாக கதையை நகர்த்தும் விதத்திலும் படம் இன்னொரு பரிமாணம் எட்டுகிறது.
இயக்குனரே நாயகன் என்றாலும் மற்ற கேரக்டர்களையும் படம் நெடுக உலவ விட்டு சரியாசனம் கொடுத்த விதத்தில் இந்த எழிலன் நிஜமாகவே அழகன்.
தன்னை தன் தந்தையிடம் போட்டுக் கொடுத்து அடிவாங்க வைக்கும் ஐந்தாம் படை நண்பன் யார் என்ற கண்டுபிடிக்க நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகள் அத்தனையும் குபீர் சிரிப்பு ரகம். நாயகனின் அம்மா கேரக்டர், எப்போதும் தின்று கொண்டே இருக்கும் நண்பன் கேரக்டர் இரண்டுமே திரைக்கும் நடிப்புக்கும் புதுசு. நண்பர்களாக வரும் ராஜா அய்யப்பன், சபரிஸ், மணிவாசகன் சரியான தேர்வு என்பதை நடிப்பில் நிரூபிக்கிறார்கள்.
நாயகனின் நிச்சயதார்த்தம் நின்று போவதும் அதன் பின்னான காட்சிகளும் இயக்க முத்திரை.
தமீம் அன்சாரி இசையும் சபரிஷ் ஒளிப்பதிவும் இந்த கலகலப்புக் கதைக்குள் சிலுசிலு தென்றல்.
இந்த புதியவர்கள் வரவேற்று சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட வேண்டியவர்கள்.
