சினிமா செய்திகள்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

இன்னும் கொடுப்பேன்…இனியும் கொடுப்பேன்…
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் அதன் தொழிலாளர்களுக்காக சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

இதற்காக நடைபெற்ற விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீ கீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் விஜய் சேதுபதி, பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார்.

விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “இயக்குனர் செல்வமணி இது தொடர்பாக என்னிடம் வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஆனால் உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காகத்தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

இந்த தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர்.கே.செல்வமணியிடம் கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும் போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகி விடுகிறது.

இந்தத் திட்டம் 800 கோடி மதிப்பிலானது. அதில், நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான்.

இது ஒரு மிகப் பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிக சிறப்பாக தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும். நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்று நம்புகிறேன்.

என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.

சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்தக் கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாக தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ் பாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டை தலைமுறை, தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *