சினிமா செய்திகள்திரை விமர்சனம்

சூ மந்திரகாளி திரை விமர்சனம்

தலைப்பை பார்த்ததுமே ஏதோ மாந்திரீகம் நிறைந்த பேய் படமோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் இந்த படத்திலோ அதையும் தாண்டி சமூகத்துக்கு அவசியமான மெசேஜ் ஒன்று இருக்கிறது. இதுவே படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது.

பங்காளியூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக் கொள்கிறார்கள். நாயகன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான். அங்கு பில்லி சூன்யம் வைப்பதில் தேர்ந்த நாயகி அவன் காதலியாகிறாள். அவளை தனது கிராமத்திற்கு அழைத்து வந்து பில்லி சூன்யத்தில் மூழ்க்கிக் கிடக்கும் தனது பங்காளிகளை திருத்த முயல்கிறான்.

ஆனால் நடந்தது வேறு. ‘இவனுக்கு இத்தனை அழகான காதலியா?’ என பொறாமையில் வெந்து சாகும் பங்காளிகள் அவர்கள் காதலுக்கு தடைகளை ஏற்படுத்த, தடைகளைத் தாண்டி திருமணம் நடந்ததா? பங்காளியூர் மக்கள் திருந்தினார்களா? என்பதை கலகலப்பாக சொல்லியிருப்பதில் கில்லியடிக்கிறது, படம்.

பொறாமை நிறைந்த கிராமம் ஒருபக்கம். மந்திர தந்திர கிராமம் இன்னொரு பக்கம். இரண்டும் இணைந்து திரைக்கதை புது வடிவம் தருவது சிறப்பு. குறிப்பாக மந்திர கிராமத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனித்தனி லாஜிக் சொல்லி அதை இறுதி வரையிலும் கொண்டு வந்தது சிறப்புக்கே சிறப்பு.
படம் முழுக்க கையில் கத்தி தூக்கிக் கொண்டே திரியும் கிராமத்து ஆள், முழுக்க முழுக்க பெண் வேஷத்தில் வரும் நண்பன், திருட வந்து மாட்டிக்கொண்டு அங்கேயே சுற்றும் இளைஞன் என ஆங்காங்கே கதை நெடுக நகைச்சுவை பூக்களை தூவிக்கொண்டே இருக்கிறார்கள்.

நாயகனாக கார்த்திகேயன் வேலு, நாயகியாக சஞ்சனா பர்லி இருவரும் புதுமுகம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் ஸ்கோர் அள்ளுகிறார்கள். பெண் வேடத்தில் வரும் கிஷோர் தேவ் உள்ளிட்ட கிராமத்து மக்கள் அத்தனை பேருமே நடிப்பில் பிரமிக்க வைக்கிறார்கள்.
நவிப் முருகனின் பின்னணி இசையும் முகமது பர்ஹானின் கேமராவும் இந்த மந்திரகாளியின் மகத்தான சக்திகள்.

சீரியஸ் மாதிரி தெரியும் கதையை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருப்பதில் ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார், இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை. சிரிக்கலாம். ரசிக்கலாம்…