ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்
அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படாத ஒரு கிராமத்துக்கு காணாமல் போன மாடுகள் மூலம் விடிவு கிடைக்கிறது. அதை இயல்பான திரைக்கதையில் வார்த்தெடுத்ததில் கவனம் பெறுகிறது, படம்.
தனது உயிரான பிள்ளைகளை காணவில்லை என்று நாயகன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வருவதுடன் தொடங்குகிறது, படம். அவன் பிள்ளைகள் என்று சொன்னது தனது வளர்ப்பு காளைகள் தான் என்று தெரிய வரும்போது ஏட்டையாவுக்கு மட்டுமின்றி நமக்கும் தான் அதிர்ச்சி.
கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை பிள்ளைகளைப்போல வளர்க்கிறார்கள், அந்த கிராமத்து இளம் தம்பதிகள். அந்த காளைகள் இரண்டும் ஒரு விடியற்காலையில் காணாமல் போகிறது. தேடித்தேடி அலுத்த தம்பதிகளுக்கு சேனல் ஒன்று கைகொடுக்க…காளைகள் காணாமல் போன விஷயத்தில் இருந்த அரசியல் அம்பலமாவதோடு, வறண்டு கிடந்த அந்த கிராமமும் வசந்தமாகிறது. அது எப்படி என்பதும் கடைசியில் காளைகள் கிடைத்ததா என்பதும் மண் வாசனையுடன் கூடிய திரைக்கதை.
கிராமத்து இளைஞனாக மித்துன் மாணிக்கம் நல்ல தேர்வு. அசல் கிராமத்துக் களையுடன் படம் நெடுக வந்து தன் தேர்வை நியாயமாக்குகிறார். அவரது மனைவியாக ரம்யா பாண்டியன். காளைகள் தொலைந்த பிறகு சந்தோஷத்தை தொலைத்த அந்த முகம் கண்ணுக்குள் நிற்கிறது. காணாமல் போன தங்கள் காளைகளுக்குப் பதில் வேற இரண்டு காளைகளை தர முன்வரும் அரசியல்வாதியிடம், ‘உங்க வீட்ல ரெண்டு பிள்ளைக காணாமப் போய் அதுக்குப் பதிலா வேற ரெண்டு பிள்ளைகளை கொண்டு வந்து தந்தா ஏத்துப்பீங்களா?’ என அவர் நியாயம் கேட்கும் இடத்தில், அப்பத்தா சத்தியமா நடிப்புல ஜெயிச்சிட்டே ஆத்தா.
நாயகனின் நண்பனாக வடிவேல் முருகன் வரும் காட்சிகளில் எல்லாம் அமளி துமளி பண்ணுகிறார். இவர் மாதிரியே அந்த கிராமத்து லட்சுமிப் பாட்டி அசத்தறார்ங்கோ.
தொலைக்காட்சி நிருபராக வந்து ஊருக்கே நல்லது பண்ணும் கேரக்டரில் வாணி போஜன் பளிச்.
சுகுமார் ஒளிப்பதிவும் கிரிஷ் இசையமைப்பும் இயக்கிய அரிசில் மூர்த்தியின் பக்க(ா)பலம். மின்சாரம் கூட இல்லாத அந்த கிராமத்தை இந்தியா முழுக்க பேச வைத்த திரைக்கதை அசுர பலம்.