சினி நிகழ்வுகள்

இன்றுடன் “ராட்டினம்”
திரைப்படம் வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகள் ஆக போகின்றன. சினிமாவை பற்றி நான் பேசுவதற்கு, எழுதுவதற்கு, இந்த துறையில் நிலைப்பதற்கு என அனைத்து வெளிச்சத்தையும், தகுதியையும் “ராட்டினம்” படம்தான் எனக்கு பெற்று தந்தது.
வேறு சில கதை தயாரிப்புகளை நான் செய்து இருந்த போதும் எனது முதல் படமாக “ராட்டினம்” வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
தமிழ் சினிமாவிற்கு நான் நடிகனாக ஆக வேண்டும் எனும் ஆசையில் வந்தேன். ஆனால் இந்த துறையில் முழுமையாக விழுந்த பிறகு,
‘இயக்குனர்’ என்ற பாதையில் நடக்க துவங்கிய பிறகு
நான் இயக்கும் படங்கள் முடிந்தவரை தரமான ஆக்கமாக இருக்க வேண்டுமென முடிவு செய்து நான் இயக்கி,
ரசிகர்கள்  மற்றும் திரையுலக ஜாம்பவான்கள்
பாராட்டிய படம் “ராட்டினம்”.
அந்த படத்தின் வெற்றி என் முடிவிற்கு கிடைத்த பரிசாகத்தான் நான் கருதுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கை எவ்விதம் மாறுகின்றது என்பதை அடையாளப்படுத்தவே “ராட்டினம்” படத்தை உருவாக்கினேன். அதன் வெற்றி எனக்கு அளித்த மனநிறைவு வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று.

ஆகவே அனைத்து விதத்திலும் வெற்றியை பெற்ற “ராட்டினம்” வெளிவந்த பத்தாவது வருட நாளில்  எனது மூன்றாவது பட அறிவிப்பு செய்ய வேண்டுமென முடிவு செய்து இருந்தேன். நண்பர்களாலும், எனது நலம் விரும்பிகளான
திரையுலகை சேர்ந்த சிலராலும் அனைத்தும் தயாரான நேரத்தில் இந்த இரண்டாவது அலை தற்காலிக தடையை ஏற்படுத்தி விட்டது. முற்றிலும் நான் எதிர்பாராத  இந்த தடை எனக்கு அளித்த பேரதிர்ச்சிதான் இந்த பதிவை நான் எழுத நேர்ந்தது.
சினிமா என்பது கவனமில்லாமலோ போகிறபோக்கிலோ உருவாக்கபடும் ஒன்று அல்ல.
நாம் சாதாரணமாக அணுகும் எந்த சினிமாவின் பின்னாலும் கலைஞனின் ஈடிணையற்ற அர்ப்பணிப்பும் தியாகமும் உள்ளது. ஒரு சினிமாவில் செய்யப்பட்டுள்ள உழைப்பு வெறும் உடல் உழைப்பாக மட்டுமே பார்த்தால் கூட வேறு எந்த தொழிலிலும் உள்ள உழைப்பை விட பலமடங்கு அதிகமானது
மனதளவில் உயிர்ப்புடன் இல்லாமல் சினிமாவில் இயங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே நான் உறுதியாக நம்புகிறேன்.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு உழைத்தால்தான்
நினைத்தபடி காட்சி வரும். அப்படித்தான் ஒரு சினிமாவை திரையில் நிகழ்த்த போராடி
ஆக வேண்டும்.
அது இந்த துறையில் இருக்கும் எல்லோருக்கும் நிகழ்வதுதான். ஆனால் அந்த போராட்டத்துடன் கொரானாவும் சேர்ந்து என் முயற்சிகளை பின்னுக்கு தள்ளி தொய்வடைய செய்கிறது. ஆனாலும் இது தற்காலிகமானது தான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

கொண்டை ஊசி வளைவுகள் எப்போதுமே ஏறுவதற்கு சிரமத்தையே அளிக்கும், ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஏறித்தானே ஆக வேண்டும். அது போல்தான் எனது முயற்சிகளில் இப்போது காணப்படும் தடைகளும். மனதளவில் இதை எதிர்க்கொள்ள நான் தயாராகி விட்டேன் என்றே தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, இந்த துறையில் உள்ள அனைவருக்குமான செய்தி அதுதானே. சொல்ல முடியாத அளவு வேதனைகளை இந்த பெருந்தொற்று அனைவருக்கும் குறிப்பாக கலைத்துறைக்கு கொடுத்து இருக்கிறது. ஆனாலும் இதை கடந்துதானே ஆக வேண்டும்!! கடப்போம், மீள்வோம் என்பது உறுதி.

விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்புடன் தொடக்க விழாவில் சந்திப்போம்.

நன்றி🙏🏼

கே எஸ் தங்கசாமி

இயக்குனர் &  தயாரிப்பாளர்

ராட்டினம் & எட்டுத்திக்கும் மதயானை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *