திரை விமர்சனம்

‘காடன்’ சினிமா விமர்சனம்

இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் எதிர்ப்பும் என்ற ஒன்லைனில் யானைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை கலந்துகட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள ‘காடன்.’

அஸ்ஸாமில் காட்டைக் கூறுபோட்டு யானைகளின் வாழ்வாதாரத்தை அழித்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, பிரமாண்ட காட்சிகளோடு இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன்.

அது யானைகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிற பல கிலோ மீட்டர் சுற்றளவுள்ள அடர்ந்த காடு. அந்த காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரினங்களை குறிப்பாக யானைகளை தனி மனிதனாக – தனது சொந்த குழந்தைகளைப் போல் கட்டிக் காக்கிற மனிதன் ‘காடன்.’

பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தருகிற நிறுவனம் கட்டுவதாக சொல்லி அந்த காட்டை அழிக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவர். அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது யானைகளின் வழித்தடம் தடுக்கப்பட்டு யானைகள் ஊருக்குள் வந்து பதட்டம் கூடுகிறது.

காடு அழிவதை, யானைகள் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டு மனம் கொந்தளிக்கிற காடன், அமைச்சரின் நிறுவனத்துக்கெதிராக களமிறங்க அடுத்தடுத்த காட்சிகள் ரணகளம்.

புலியைக் கூட கண்ணசைவில் கட்டுப்படுத்துகிற, யானைகளை தன் குரலால் கட்டிப் போடுகிற, பறவைகளிடன் அதன் பாஷையில் பேசுகிற காட்டு மனிதராக காடன். முரட்டுத் தோற்றம், சாக்குப் பையில் தைத்த உடை, ராட்சத பலம்,கண்களில் பாசம், சதிவலையில் சிக்கவைக்கப்பட்டு சிறைக்குள் முடங்கித் தவிக்கையில் இயலாமை என தான் ஏற்ற காடன் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தெலுங்குதேச சூப்பர் ஹீரோ ராணா டகுபதி. சண்டைக் காட்சிகளில் வெளிப்படுகிற ஆக்ரோஷத்தில் சூறாவளியின் சீற்றம்!

ராணா சிலபல உயரிய விருதுகளுக்காக காத்திருக்கலாம்!

அமைச்சரின் அட்டூழியத்துக்கு துணைபோகிறவராக விஷ்ணு விஷால். வருகிற காட்சிகள் குறைவானாலும் கும்கி யானைப் பாகனாக அவரது கம்பீர நடிப்பு நிறைவு!

கார்ப்பரேட் முதலாளிகளின் கொடூர முகங்களை எத்தனையோ படங்களில் பார்த்தாயிற்று. அதே டெம்ப்ளேட் பாத்திரத்தில் ஆனந்த் மகாதேவன். சின்னச் சின்ன முகபாவங்களில் அவர் காட்டும் குரூரம் அபாரம்.

கதாநாயகிகளுக்கு எந்த அவசியமும் இல்லாத கதையோட்டம். ஆனாலும், திரைக்கதையின் பிடிப்புக்காக ஸோயா ஹுசைன், ஷ்ரியா பில்கன்கர் என இரண்டு பேர் வருகிறார்கள். நிருபராக வருகிறவர் சற்றே கவனிக்க வைக்கிறார்.

விஷ்ணு விஷாலின் மெல்லிய காதல் எபிசோடு பெரிதாய் ஈர்க்காவிட்டாலும் இதம்!

படத்தில் நடிகர், நடிகைகள் கூட்டம் கூட்டமாக இருந்தாலும், சம்பத்ராம், போஸ் வெங்கட் என ஒருசிலர் தவிர தமிழ் படத்தில் பார்த்துப் பரிச்சயமான முகங்களைத் தேட வேண்டியிருக்கிறது!

தங்கள் பாதையில் சுற்றுச் சுவராக எழுந்துநிற்கும் இரும்பு வேலிகளை யானைகள் தகர்த்துத் துவைக்கிற காட்சி அதகளம் அட்டகாசம்.

ஏ.ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவில், அகன்று செழித்த அந்த பிரமாண்ட காட்டை பார்த்துகொண்டே இருக்கலாம்.

பரபரப்பான காட்சிகளுக்கு தனது பின்னணி இசையால் புயல்வேகம் தருகிறார் சாந்தனு மொய்த்ரா.

அங்கங்கே சினிமாத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும் இயற்கையின் அத்தியாவசியம், காடுகளின் அவசியம், யானைகளின் வாழ்வாதாரம் என கதையோட்டம் முழுக்க சமூக அக்கறையை நிரப்பியிருப்பதற்காக இயக்குநர் பிரபு சாலமன் உள்ளிட்ட படக்குழுவுக்கு ராயல் சல்யூட்!

தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்கலாம். அதற்கான தகுதி காடனுக்கு இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *