‘மிருகா’ சினிமா விமர்சனம்
கெட்டவனை நாயகனாக்கியிருக்கிற படம்.
கணவரை இழந்த பெரும் பணக்காரப் பெண்களை மயக்கி, திருமணம் செய்து அவர்களின் பணத்தை, சொத்துக்களைச் சுருட்டி, அந்த குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கொலை செய்வதை ஹாபிபோல் தொடர்கிறார் ஸ்ரீகாந்த்.
பெரியளவிலான சொத்துக்கு அதிபதியான ராய் லெஷ்மியின் தங்கைக்கு, ஸ்ரீகாந்தின் கொடூர முகம் தெரியவர, அவரை மிரட்டி – தன் அக்கா ராய்லெஷ்மியை ஏமாற்றி பணத்தைக் கைப்பற்றி தனக்குக் கொடுக்கும் பொறுப்பை ஸ்ரீகாந்த் வசம் ஒப்படைக்கிறார்.
ஸ்ரீகாந்த் ராய்லெஷ்மியை மயக்குகிறார். அவரது கம்பெனிக்கு மேனேஜராகி, ராய்லெஷ்மிக்கு கணவராகி, பெரும்சொத்துக்கு முதலாளியாகிறார். தன்னை மிரட்டி பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் ராய்லெஷ்மியின் தங்கையை போட்டுத் தள்ளுகிறார். அடுத்ததாக ராய்லெஷ்மியையும் மேலோகத்துக்கு அனுப்ப பார்க்கிறார். அதிலிருந்து ராய்லெஷ்மியும் அவரது குழந்தையும் தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த போராட்டம் என்னவானது என்பதே ‘மிருகா’வின் கிளைமாக்ஸ்…
படத்தை இயக்கியிருப்பவர், இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த ஜே. பார்த்திபன்.
கொலைக்குத் திட்டமிடுவது, புத்திசாலித்தனமாக -கொடூரமாக கொலை செய்வது என மனித மிருகமாக ஸ்ரீகாந்த். என்னதான் அவர் வில்லனம் செய்தாலும் முகத்திலிருக்கும் ஹீரோ கலை மாறாமலிருப்பது பொருந்தவில்லை. (ஹீரோவாக நடித்துவந்த மோகன், வில்லனாக நடித்தபோது வில்லத்தனத்தை முகத்தில் பிரதிபலித்தது நினைவிருக்கலாம். அந்த வித்தியாசம் ஸ்ரீகாந்திடம் மிஸ்ஸிங்.)
ராய்லெஷ்மி பளீர் தோற்றத்தில் இருக்கிறார். முந்தைய படங்களைப் போல் கவர்ச்சி காட்டாமல் முகபாவத்தில் உணர்வுகளைக் கொட்டவேண்டிய பாத்திரம். தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.
தேவ்கில், வைஷ்ணவி சந்திரமேனன், நைரா, த்விதா, பிளாக் பாண்டி என படத்தில் இன்னும் பலர்… கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ராய்லெஷ்மி உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் புலி மோதுகிற காட்சிகள் பய உணர்வைத் தூண்டுவதாக இருந்தாலும், அந்த காட்சிகள் வரும்போது CG என போடுவது பய உணர்வை மழுங்கடிப்பது போலிருக்கிறது. (அப்படி போட வேண்டும் என்பது சென்ஸாரின் ரூல். என்ன செய்வது?)
பின்னணி இசையால் காட்சிகளுக்கு ராட்சச வேகம் தந்து மிரட்டுகிறார் அருள் தேவ்.
ஊட்டியின் அழகு எம்.வீ.பன்னீர்செல்வம் ஓளிப்பதிவில் கண்களுக்கு குளிர்ச்சி.
ஆரம்பக் காட்சியில் ஸ்ரீகாந்த் அடர்தாடியோடு கால் ஊனமானவராக வருகிறார். கால் ஊனம் என்பது, அப்போது அவர் யாருடன் வாழ்க்கையில் இணைந்திருக்கிறாரோ அவரை ஏமாற்றுவதற்கான நடிப்பு என போகிறது திரைக்கதை. பெரும் பணக்காரப் பெண், ஊனமானவரை வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்ததன் பின்னணி பற்றி தெரியாததால் அந்த காட்சி அபத்தமாகவே கடந்து போகிறது. இதுபோல் இன்னும் சில காட்சிகள்…
உங்களால், கதை, லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் விறுவிறுப்பான காட்சிகளை மட்டுமே ரசிக்க முடியுமென்றால் ‘மிருகா’வால் திருப்தி கிடைக்கலாம்.