சினி நிகழ்வுகள்

‘நெஞ்சம் மறப்பதில்லை’ சினிமா விமர்சனம்

ரொம்ப நாள் கழித்து செல்வராகவன் படம்; அவருக்கே உரிய பாணியில். ஹாரர் சப்ஜெக்ட் என்பது சற்றே புதுசு!

எஸ்.ஜே.சூர்யா – நந்திதா தம்பதியின் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் பணியில் சேர்கிறார் ரெஜினா. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெஜினாவை அனுபவிக்க ஆசை உருவாகி, அதற்காக திட்டம் போட்டு அனுபவித்தும் விடுகிறார்.

கூடவே அந்த வீட்டின் வேலைக்காரர்கள் நான்கு பேரும் ரெஜினாவை கற்பழிக்கிறார்கள். அத்தோடு விடாமல் கொலை செய்து புதைக்கிறார்கள். ரெஜினா பேயாக வந்து பழிவாங்கும் படலத்தை தொடங்குகிறார்… இயக்கம்: செல்வராகவன்

ரோபோ போல் நடப்பது, கத்திக் கத்திப் பேசுவது, காமவெறியை கண்ணில் பிரதிபலிப்பது என எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மிரட்டல். அவரது நடிப்பில் காமெடியும் பின்னிப் பிணைந்திருப்பது ரசிக்க வைக்கிறது.

நந்திதாவுக்கு பணக்காரத் திமிர் காட்ட வேண்டிய வேலை. அதை முடிந்தவரை கம்பீரமாக செய்திருக்கிறார்.

தான் சார்ந்திருக்கும் தொண்டமைப்புக்காக நிதி திரட்டும் நோக்கில் வேலைக்குச் சேர்ந்து, காமவெறிக்குப் பலியாகும் பரிதாபமான கதாபாத்திரத்தில் ரெஜினா. நடிப்புப் பங்களிப்பில் அத்தனைப் பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார். எஸ்.ஜே.சூர்யா – நந்திதா தம்பதியின் குழந்தை மீது காட்டும் பிரியத்தில் தத்ரூபமான தாயன்பை வெளிப்படுத்துவது ஈர்க்கிறது!

அந்த நான்கு வேலைக்காரர்களின் நடிப்பும் நேர்த்தி. கிறிஸ்தவ தொண்டமைப்பின் தலைவியாக வருகிற பெண்மணியும் மனதில் நிற்கிறார்!

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் கேட்கக் கேட்க பிடிக்கலாம்.

கதை அப்படி இப்படி இருந்தாலும் முதல் பாதி ரசிக்க வைக்கும்படி இருப்பது பலம். இரண்டாம் பாதி பொறுமையைச் சோதிக்கும்படியும் இருப்பது பலவீனம்.

எப்படியிருந்தாலும், செல்வராகவன் படங்களை ரசிக்க ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்கு நெஞ்சம் மறப்பதில்லை வித்தியாசமான விஷுவல் டிரீட் என்பதில் சந்தேகமில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *