‘அன்பிற்கினியாள்’ சினிமா விமர்சனம்
நடிகர் அருண் பாண்டியனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் நிஜத்தில் அப்பா பொண்ணு. அவர்கள் அதே உறவாக நடித்துள்ள படம்.
அந்த அப்பா தனது உயிருக்குயிரான மகளை காவல்நிலையத்தில் அவளது காதலனுடன் சேர்த்து சந்திக்கிற சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதுவரை மகளுக்கு அப்படியொரு காதலன் இருப்பது தெரியாத அப்பா, மகள் மீதான கோபத்தில் பேசாமலிருக்கிறாள். அன்றைய தினம் வழக்கமான பணிக்குச் சென்ற மகள் நள்ளிரவாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் தொற்றுகிறது.
அவள் தன் காதலனுடன் எங்காவது போயிருக்கலாமோ என அந்த அப்பா யோசிக்கிறார். விவகாரம் காவல்நிலையத்துக்குப் போனதும் அவர்களும் அதே கோணத்தில் யோசிக்க, அந்த காதலனே காவல் நிலையத்துக்கு வருகிறான். மகள் காணாது போனதில் அவனுக்கு சம்பந்தமில்லை என்பது தெரியவருகிறது. எல்லாருமாகச் சேர்ந்து தேடுகிறார்கள்.
அவள் படு ஆபத்தான சூழலில் சிக்கி, அந்த விவரத்தை யாருக்கும் சொல்லமுடியாமல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறாள். அவள் அந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீள்கிறாள் என்பதை விறுவிறுப்பாக, உணர்வுபூர்வமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர்.
இரண்டு வருடங்கள்முன் ரிலீஸாகி வரவேற்புபெற்ற ‘ஹெலன்’ என்ற மலையாளப்படத்தின் ரீ மேக்.
‘அன்பிற்கினியாள்’ என்ற அழகான பெயரைச் சுமந்து வருகிற கீர்த்தி பாண்டியன் தன் அப்பா மீது காட்டுகிற பாசம் நெகிழவும், குளிர்பதன அறைக்குள் மாட்டி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் காட்சிகள் கலங்கவும் வைக்கின்றன. அவரது நடிப்புக்கு கெளரவமிக்க விருதுகள் தேடிவரும்.
அருண் பாண்டியனை இதுவரை இப்படியொரு குணசித்திர வேடத்தில் பார்த்ததில்லை. 18 வருடங்கள் கழித்து நடித்திருக்கிறார். படம் நெடுக பாசத்தால் துடித்திருக்கிறார்! பாராட்டுக்கள்!
கீர்த்தியின் காதலனாக ப்ரவீன் ராஜா, ரெஸ்டாரென்ட் மேனேஜராக பூபதிராஜா, ஈகோ பேர்வழியாக, சப் இன்ஸ்பெக்டராக ரவீந்திரவிஜய், செக்யூரிட்டியாக ஜெயராஜ் கோழிக்கோடு… அத்தனைப் பேரின் நடிப்பிலும் இருக்கிறது ஜீவன்.
திரைக்கதை காட்சிகளுக்கு விறுவிறுப்பூட்ட, அந்த காட்சிகளுக்கு இசைமூலம் சுறுசுறுப்பூட்டிய ஜாவித் ரியாஸ், லலித் ஆனந்த் வரிகளில் உருவான பாடல்களை இனிமையாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னபிற தொழில்நுட்ப சங்கதிகளும் கச்சிதம்!
‘அன்பிற்கினியாள்’ பாசப்பிணைப்பின்ஆழத்தை உணர்த்துபவள்; குடும்பத்தோடு பார்ப்பதற்கு உகந்தவள்!
