சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

‘கமலி From நடுக்காவேரி’ சினிமா விமர்சனம்

பாடம் நடத்துகிற படம்.

படிக்கிற வயதில் காதல் வந்தால் படிப்பு கெட்டுப் போகும்தானே? தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி என்ற கிராமத்தை சேர்ந்த கமலிக்கு படிக்கிற வயதில் காதல் வருகிறது. அந்த காதல், அதுவரை படிப்பில் சுமாராக இருந்த அவளை, நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயரம் தொட வைக்கிறது. என்ன, ஏது, எப்படி, எதனால் என்பதுதான் ஸ்கிரீன் பிளே.

கமலியாக ஆனந்தி. கிட்டத்தட்ட படத்தின் அத்தனை காட்சியிலும் வருகிறார். வருகிறபோதெல்லாம் புதிது புதிதாய் உடையணிந்து கவர்கிறார். புன்னகை, ஆதங்கம், இயலாமை, கோபம், காதல் என அத்தனை உணர்ச்சிகளையும் இயல்பு மீறாமல் வெளிப்படுத்தி ஈர்க்கிறார்.

பளபள தோற்றமும் பளீர் சிரிப்புமாக நாயகன் ரோஹித் ஷெராப். ‘டியர் ஜிந்தகி’ என்ற இந்தி படத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் நடிப்பதற்கு வேலையில்லை; சிரித்துக் கொண்டேயிருக்கிறார். அதைத் தாண்டி அந்த கதாபாத்திரத்துக்கு வேறெந்த தேவையுமில்லை.

ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான நுழைவுத் தேர்வு எந்தளவுக்கு கடினமாக இருக்கும் என்பதையும் அதில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமம் என்ன என்பதையும் கமலிக்கு எடுத்துச் சொல்லி பயிற்சி தருபவராக பிரதாப் போத்தன்.
கமலியை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவது, அவள் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறும்போது பெருமிதப்படுவது என மனிதர் அசத்துகிறார்.

மகள் மீது திகட்டத் திகட்ட பாசம் வைப்பதோடு, அவள் விரும்பியதை படிக்கவும் வைக்கிற அப்பாவாக அழகம் பெருமாள், அக்கறையுள்ள ஆசிரியராக இமான் அண்ணாச்சி, கமலியின் தோழியாக வருகிற அந்த இளம்பெண், பிரதாப் போத்தன் வீட்டு வேலைக்காரப் பெண்மணி என அத்தனை கதாபாத்திரங்களிலும் இருக்கிறது உயிரோட்டம்.

காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இடங்கள் கண்களுக்கு விருந்து. ஒளிப்பதிவு ஜகதீசன் லோகயன்.

தீனதயாளன் இசையில் பாடல்கள் தாலாட்டு.

படத்தின் நிறைவில் சற்றே நீளமான காட்சியாக வருகிற குவிஸ் போட்டி எனர்ஜி!

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி

படத்தில் வில்லன் இல்லை, வன்முறை இல்லை, அபாச வசனம் இல்லை, அருவருப்புக் காட்சி இல்லை, டூயட் பாட்டு என்கிற பெயரில் அத்துமீறல் இல்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பாடம் இருக்கிறது.

ஆம்… படத்தின் புதுமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி, பிரதாப் போத்தன் கதாபாத்திரம் மூலம் இன்றைய மாணவ – மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் பாடம் நடத்தியிருக்கிறார்; போரடிக்காமல்!