குருடனாக நடிக்கும் இயக்குநர் சுப்ரமணியம் சிவா! ‘அம்மா உணவகம்’ படத்தில் அசத்தல்!

படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.பி.இப்ராஹிம் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘அம்மா உணவகம்’.
இந்தப் படத்தில் அஸ்வின் கார்த்திக், சசிசரத் இருவரும் நாயகர்களாகவும் ஸ்ரீநிதி, பாத்திமா இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். மேலும், இவர்களுடன் இந்திரன், ஆர்.வி.உதயகுமார், சரவண சக்தி, சிவா உட்பட பல முக்கிய நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.
விவேகபாரதி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘வசந்தம் வந்தாச்சு’ மற்றும் ‘பாசக்காரப் பய’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
‘திருடா திருடி’, ‘யோகி’, ‘வெள்ளை யானை’ போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. ‘வட சென்னை’, ‘அசுரன்’ படத்தின் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர்.
இவர் தற்போது உருவாகி வரும் இந்த ‘அம்மா உணவகம்’ திரைப்படத்தில் கண் தெரியாத குருடர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம் பெறும் தத்துவ வரிகள் அடங்கிய பாடல் காட்சிக்கு மிகச் சிறப்பாக நடித்துள்ளார் சுப்ரமணியம் சிவா.
கலங்காதே மனமே,
நிழலாய் வருமே, நாளை உன் கனவே…
கவலைகள் இங்கு நிரந்தரமில்லை..
துன்பங்கள், துயரங்கள் தொடர்வதில்லை..” எனும் பாடலை கானாபாலா பாடியுள்ளார். தொல்காப்பியன் எழுதிய இந்தப் பாடலுக்கு சுலக்ஷாடாடி இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

