கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்.’ ஏப்ரல்-2-ம் தேதி வெளியாகிறது!
‘கைதி’ வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சுல்தான்’.
‘ரெமோ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நாயகியாக உள்ள ராஷ்மிகா நடித்துள்ளார். யோகி பாபு, ‘கே.ஜி.எப்’ வில்லன் ராம்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.
கார்த்தி புது கெட்டப்பில் நடித்திருக்கும் இந்த படம் கலர்புல் கமர்ஷியல் படமாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகியுள்ளது.

வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் கூறுகையில், “மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளிதான் இந்த படம். முழுக் கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட்டே இருக்கும்.
நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க, அதேபோல்தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதைதான் இந்தப் படம்.
பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். ‘கைதி’யோட வெற்றிக்குப் பிறகு கார்த்தி சார்கிட்ட நிறைய பொறுப்பு வந்திருக்கு. விமர்சனங்கள் அனைத்தையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறார். தன்னை அதுக்கேற்றவாறு வடிவமைச்சிக்கிறார்.
இந்தப் படம் அவரோட நடிப்பை இன்னும் மெருகேத்தி காட்டும். அவருக்கு படம் ரொம்பவும் பிடிச்சிருந்தது. தெலுங்கில் ராஷ்மிகாவ கொண்டாடுறாங்க. ஆனால், பக்கத்து வீட்டு பெண் போல, அவ்வளவு எளிமையா இருப்பார். நடிப்புனு வந்தா அசத்திடுறார். இப்படத்தில் கார்த்தி, ராஷ்மிகா ஜோடி கலர்ஃபுல்லா இருக்கும்.
கார்த்தி, யோகிபாபு காமெடி கூட்டணி அதகளப்படுத்தியிருக்காங்க. கே.ஜி.எஃப். வில்லன் ராம்சந்திர ராஜு மிரட்டியிருக்கார். வெறுமெனே அவரைப் பார்த்தால்கூட பயமா இருக்கும், அந்த அளவு மனுஷன் நடிப்பில் பின்னியிருக்கார். விவேக் மெர்வின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம்.
ஒரு பெரும் கூட்டத்தை வைத்து, மிகப் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணியிருக்கோம். தன்னை நம்பி வந்த உறவுகளை எப்படி பாத்துக்கறதுங்கறத சுல்தான் சொல்லுவான். இது குடும்பத்துடன் ஜாலியா பார்க்ககூடிய படமாகவும், அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இருக்கும்.
படம் அழகா வந்திருப்பதில் எங்களுக்கு முழு திருப்தி. அடுத்து, ரசிகர்களின் பாராட்டுதலுக்காகத்தான் காத்திருக்கிறோம்…” என்றார்.
