‘பேச்சிலர்’ அந்த மாதிரி படமா? இயக்குநர் என்ன சொல்றார்?
ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருகிறது அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி. அதில் ‘பேச்சிலர்’ படமும் ஒன்று.
இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். இவர்களோடு பகவதி பெருமாள், YouTube ‘நக்கலைட்ஸ்’ அருண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராக இருந்த சதீஷ் செல்வகுமார், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தின் டீசரை வைத்துப் பார்த்தால் படம் அடல்ட் ஒன்லி படமோ என்ற சந்தேகம் வருகிறது.
ஆனால் படத்தின் இயக்குநரோ படம் அடல்ட் படமில்லை.. குடும்பத்தினருடன் பார்க்கக் கூடிய படமாகத்தான் இருக்கும் என்கிறார்.
படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வக்குமார் பேசும்போது. “கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்து ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறுக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படம்.
இளம் பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண் மகன் என ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்படத்தில் இருவிதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார்.
படத்தின் டீஸர், இப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம். ஆனால், இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும். படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும்…” என்றார்.
