சினி நிகழ்வுகள்

‘பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை; முன்னால் பேச யாருக்கும் தைரியமில்லை! -‘ஷகிலா’

பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை; முன்னால் பேச யாருக்கும் தைரியமில்லை! -‘ஷகிலா’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ஷகிலா பேச்சு

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களெல்லாம் தங்களது படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாகக் கூறி, இவரது படத்துக்கெதிராக பிரச்னைகளைக் கிளப்புகிற அளவுக்கு மலையாளத்தில் ‘ஏ’ சான்றிதழ் படங்களாக நடித்துக் குவித்தவர் ஷகிலா.

ஒரு கட்டத்தில் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, காமெடி மற்றும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவிலும் நடித்து வந்தார்.

அவரது வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து, கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கியுள்ள படம் ஷகிலா.

வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 18.12. 2020 அன்று மாலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ ராஜீவ் பிள்ளை, படத்தின் இசையமைப்பாளர் வீர் சம்ரத், தயாரிப்பாளர் சரவண பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகை ஷகிலாவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையா ”ஷகிலா நடித்து பெயர் பெற்றது அந்த’ மாதிரிப் படங்களாக இருந்தாலும், அவரது வாழ்க்கை வலி நிறைந்ததாகவே இருந்துள்ளது. அதை அழகாக காட்சிப்படுத்தும் விதமாக படம் எடுத்து, வெளியிடவிருக்கும் படக்குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கொரோனாவால் மூடப்பட்ட தியேட்டர்கள் திறந்தபின்னும் கூட்டம் வராத நிலை இருக்கிறது. இந்த சிக்கல் மாஸ்டர் மாதிரியான படங்கள் ரிலீஸானால் மாறக்கூடும். அதற்கு முன் வெளிவரும் இந்த படம் தியேட்டருக்கு திருவிழா கூட்டத்தைக் கூட்டிவரும் என நம்பலாம்” என்றார்.

”ஷகிலா மலையாளத்தில் கடப்பாறை, மம்மூட்டிகளெல்லாம் புரட்டித் தள்ள நினைத்த பவர்ஃபுல் நடிகை. ஒருவராலும் இந்த சேச்சியின் ஆட்சியை அசைக்க முடியவில்லை. ஷகிலா ஒவ்வொரு நாளும் உடல்வலியோடும், மன வலியோடும்தான் உறங்கப் போயிருப்பார் என்பது நாமெல்லாம் அறிந்தது. அவரது சினிமா வாழ்க்கை நிச்சயம் சாதனைப் பயணம்தான். அந்த சாதனைகள் அவர் வாழும் காலத்திலேயே படமாக்கப்பட்டு வெளிவரவிருப்பதும் சாதனைதான். படம் வெற்றிபெற வாழ்த்துகள்!” என்றார் இயக்குநர் பிரவீன் காந்தி.

நடிகை ஷகிலா பேசும்போது, ”என்னை பத்தி பெருசா சொல்றதுக்கு எதுவும் இல்லைன்னுதான் சொல்வேன். இங்க பேசுனவங்க ஷகிலாவோட வாழ்க்கை ரொம்ப வலியானதுன்னு சொன்னாங்க. வலிங்கிறது எல்லார் வாழ்க்கையிலும் இருக்கிறதுதான். எனக்கு என்னவொரு சந்தோஷம்னா நான் உயிரோட இருக்குறப்போவே என் வாழ்க்கைப் படம் வருதுங்கிறதுதான். சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்திருந்தாலும் படம் என் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுதான்.

இந்த படம் பார்த்துட்டு மக்களுக்கு என்மேல பரிதாபம் வரணும்கிற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. என்னைப் பத்தி முதுகுக்குப் பின்னால பேசினவங்க, பேசுறவங்க பத்தி நான் கவலைப் படுறதில்லை. முன்னால பேசுறதுக்கு யாருக்கும் தைரியமில்லை.

என் வாழ்க்கையில நான் பண்ண தப்பெல்லாம் இந்த படத்துல இருக்கு, அது பார்க்கிறவங்களுக்கு விழிப்புணர்வு தர்றதா இருக்கும். அதுதான் நான் எதிர்பார்க்குறது. நான் எழுதிய புத்தகத்திலும் அதைப் பத்தியெல்லாம் எழுதிருக்கேன்.

மீடியா பொறுத்தவரை என்னைப் பற்றி நெகடிவா எதுவும் எழுதியதில்லை. அதேபோல, என்னோட வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து ரிலீஸாகுற இந்த படத்துக்கும் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நம்பறேன்” என்றார்.

இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *