கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்
சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் காய்கறி, பூ, பழங்களின் தேவைகளை மட்டுமின்றி பல்வேறு அண்டை மாவட்ட மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்த கோயம்பேடு காய்கனி மற்றும் மலர் அங்காடிகள் கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டு, பழங்கள், மலர் அங்காடிகள் மாதவரத்திற்கும், காய்கறி கடைகள் திருமழிசைக்கும் மாற்றப்பட்டு சுமார் 70நாட்களை தொடவிருக்கிறது.
சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் கோயம்பேட்டில் அமைந்திருந்த காய்கறி மற்றும் பழங்கள், மலர் அங்காடிகளை மூலைக்கு ஒன்றாக பிரித்ததிலும், ஊரடங்கு அமுலில் இருப்பதாலும் அவ்வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வணிகர்கள் மட்டுமின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் காய்கறி சந்தை சென்னையில் இருந்து சுமார் 30கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புறநகர் பகுதியான திருமழிசைக்கு மாற்றப்பட்டதாலும், காய்கறிகள் மொத்தமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இருப்பதாலும், காய்கறி, பழங்கள், மலர் கடைகள் மூலைக்கொன்றாக சிதறிப் போனதாலும் சிறு, குறு வணிகர்களால் தினசரி சென்று அவற்றை வாங்கி வந்து வணிகம் செய்வதில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக திருமழிசை சந்தையில் காய்கறிகள் விற்பனையாகாமல் நித்தமும் அழுகிப் போய் டன் கணக்கில் குப்பைகளில் கொட்டப்படும் அவலங்களும் நடைபெறுவதால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாய பெருமக்கள் பெரும் வருவாய் இழப்பை சந்திக்கின்றனர்.
மேலும் திருமழிசையில் காய்கறி சந்தை அமைந்துள்ள பகுதி குடியிருப்புகள் இல்லாத முற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்திருந்த திறந்தவெளி பகுதி என்பதாலும், தற்போது மழைக்காலம் துவங்கி மழை பெய்யத் தொடங்கியுள்ளதாலும் காய்கறி ஏற்றி வரும் வாகனங்கள் கடும் சிரமத்தை சந்திப்பதோடு, காய்கறி வாங்க வரும் வணிகர்களும் மழைக்கு ஒதுங்குவதற்கு கூட வழியின்றி அவஸ்தையடைந்து வருகின்றனர், அதுமட்டுமின்றி வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை மழையில் நனைந்து வணிகர்களுக்கு பெரும் நிதி இழப்பை உருவாக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது என்பதற்கு நேற்று நள்ளிரவு பெய்த மழையில் காய்கறி சந்தை வணிகர்கள் சந்தித்த இன்னல்களே சாட்சி
எனவே தமிழக அரசு இனியும் தாமதப்படுத்தாமல் கோயம்பேடு காய்கனி சந்தையை திறப்பதற்கு கொரோனா நோய் தொற்றை காரணமாகச் சொல்லி பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்பேடு காய்கனி சந்தையை உடனடியாக தூய்மைப்படுத்தி, அச்சந்தை வளாகத்தில் உள்ள பல்வேறு வழிகளை அடைத்து, குறிப்பிட்ட வழிகள் வாயிலாக வணிகர்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கின்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளோடும், உரிய பாதுகாப்பு வசதிகளோடும் திறக்க சிஎம்டிஏ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
நாளை நமதே!
நன்றி
சு.ஆ. பொன்னுச்சாமி
மாநில செயலாளர் – தொழிலாளர் நல அணி
மக்கள் நீதி மய்யம்.