உயரப்பறக்கும் சூரரைப் போற்று

சினி நிகழ்வுகள் சினிமா செய்திகள் தமிழக செய்திகள் நடிகர்கள்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. இதன் டீஸர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் இதரப் பாடல்கள் வெளியிடப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், ‘சூரரைப் போற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமாப் பணியாற்றி இருக்கிறார்கள்.

இந் நிலையில் இந்த சூரரைப் போற்று உருவான பின்னணிக் குறித்து டைரக்டர் சுதா கொங்காராவிடம் கேட்ட போது, “என் முதல் படமான `துரோகி’ ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே `சூரரைப் போற்று’ படத்துக்கான தொடக்கம் எனக்குள்ள ஆரம்பமாகிடுச்சு. 2010-ல ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவரான ஜி.ஆர்.கோபிநாத்தின் பேட்டியைப் பார்த்தேன். அதைப் பார்த்ததில் இருந்தே இவரோட கதையைப் படமாகப் பண்ணணும்னு தோணுச்சு. `துரோகி’ ரிலீஸானதும் இதைப் பண்ணலாம்னு நினைச்சப்போ, ஒரு படம்தான் பண்ணியிருக்கோம். நம்மை நம்பி எப்படி ஒருத்தரோட வாழ்க்கையைப் படமாக்குறதுக்கு ரைட்ஸ் கொடுப்பார், இன்னொரு படம் பண்ணலாம்னு `இறுதிச்சுற்று’ படத்துக்கான வேலையை ஆரம்பிச்சுட்டேன். தமிழ் `இறுதிச்சுற்று’ ரிலீஸானதும் தெலுங்கு `இறுதிச்சுற்று’க்கான வேலையும் வந்துடுச்சு. அந்த சமயத்தில்தான் ஒரு நாள் சூர்யாவை மீட் பண்ணினேன். நானும் சூர்யாவும் ரொம்ப வருஷமாகவே நல்ல நண்பர்கள். ஒவ்வொரு வருட ரக்‌ஷாபந்தனுக்கும் அவருக்கு ராக்கி கட்ட, அவர் வீட்டுக்குப் போவேன். அப்படிப் போன வருஷம் போனப்போ, `என்ன படம் பண்ணிட்டு இருக்கே, எனக்கு ஏதாவது கதை இருந்தா சொல்லு’ன்னு சொன்னார். நான் ஏற்கெனவே அந்தப் பேட்டியைப் பார்த்ததுக்கு அப்புறம், அந்தக் கதை தொடர்பா பலபேரைச் சந்திச்சு, 44 பக்கத்துக்குச் சுருக்கமா எழுதியிருந்தேன். அதை அவர்கிட்ட கொடுத்து, ‘இன்னும் நான் முழுசா எழுதி முடிக்கலை. இதைப் படிச்சுட்டுச் சொல்லுங்க’ன்னு சொல்லிட்டு, தெலுங்குப் பட ஷூட்டிங் போயிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு, சூர்யாகிட்ட இருந்து பாசிட்டிவா பதில் வந்துச்சு. நானும் வேற படத்தோட ஷூட்டிங்கில இருந்தேன். சூர்யாவும் வேற வேற படங்களில் நடிச்சிட்டிருந்தார். ரெண்டு பேரும் அவங்க, அவங்க படங்களை முடிச்சுட்டு வந்ததும், `சூரரைப் போற்று’ படத்தை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.’’ என்றார்

மேலும் பேசிய அவர், “ இந்தப் படத்தை வேற ஒரு தயாரிப்பாளர்கிட்ட சொல்லலாம்னுதான் இருந்தேன். ஆனால், சூர்யாவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். அதுவும் `ஏன் இவ்வளவு செலவு பண்றீங்க, இந்த சீனை இப்படி மாத்துங்க, இந்த இடத்தில் கமர்ஷியல் சேருங்கன்னு உன்னை யாரும் எதுவும் சொல்லக்கூடாது. அதனாலதான் நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்’னு சொன்னார். ஏன்னா, ஒரு ஃப்ளைட்டோட ஒரு நாள் வாடகை மட்டுமே 47 லட்சம் வந்துச்சு. அப்படி பல நாள்கள் ஃப்ளைட்டை வெச்சு ஷூட் பண்ணியிருக்கோம். தயங்காமச் செலவு பண்ணினார். சூர்யா மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவை வெச்சுப் படம் பண்ணும்போது, அவரோட மாஸுக்காகச் சில விஷயங்களைச் சேர்க்க வேண்டியதா இருக்கும். சூர்யா நினைச்சிருந்தா எனக்கு நாலு சண்டை, அஞ்சு பாட்டு வேணும்னு கேட்டிருக்கலாம். ஆனா என்கிட்ட அப்படி எதுவுமே கேட்கலை. லக்கியா, இந்த ஸ்கிரிப்டிலேயே மாஸ் இருந்துச்சு. கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் படிச்சு, முன்னேறி ஆர்மியில் சேர்வது, அதுல இருந்து வெளியில வந்து ஏர் லைன்ஸ் ஆரம்பிக்கிறது, பிசினஸில் பல விஷயங்களை பிரேக் பண்ணி, புது வழியை உருவாக்குறதுன்னு பல மாஸ் மொமென்ட்ஸ் ஸ்கிரிப்ட்ல இருந்ததனால, எனக்கு சிரமமே இல்லை.’’ என்றும் சொன்னார்

அப்படியாப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளுமே முடிவுற்றது. கரோனா அச்சுறுத்தல் மட்டுமில்லை என்றால், இந்நேரத்துக்கு இந்தப் படம் வெளியாகி இருக்கும். தொடரும் கொரோனா அச்சுறுத்தலால் இதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. ஆனாலும், இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பி ‘யு’ சான்றிதழ் வாங்கி விட்டார்கள். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தமிழில் தணிக்கைச் செய்யப்பட்ட முதல் படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *