2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. அதுவும் அந்த ஹிட். இரண்டு மாதத்திற்குள்ளாகவே எந்தப் புதுப் படமாக இருந்தாலும் டிவியில் போட்டுவிடும் சூழல் இது. ஆனால் கில்லி ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த அளவுக்கு ப்ளாக்பஸ்டர் ஹிட். அந்தப் படம் வெளியாகி இன்னியோட 16 வருஷங்கள் ஆகுதாம்.

இந்த கில்லி உருவானக் கதை குறித்து நம்ம கட்டிங் கண்ணையா சொன்ன சுவையான தகவல் தொகுப்பு இதோ:

மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையும் விஜய்யின் கால்ஷீட்டும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் இருந்தன. அந்த ‘கில்லி’யின் ஒரிஜினல் ஒக்கடு உருவான கதையை என்ன தெரியுமோ? சென்னை மெட்ராஸாக இருந்த நேரம் அது. அப்போது குணசேகர் என்கிற ஒரு உதவி இயக்குநர் ஹைதராபாத்தின் சார்மினார் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்ற கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார். சில வருடங்கள் கழித்து, அதாவது உதவி இயக்குநராக இருந்த குணசேகர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்தே படம் எடுத்திருந்த இயக்குநர் குணசேகர் ஆகிய பிறகு. 2001ல் பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்தின் பேட்டி ஒன்றில், தன் தந்தையை எதிர்த்து பேட்மிட்டன் விளையாடியதையும், கப்களை மறைத்து வைத்ததையும் சொல்லியிருப்பதைப் பார்க்கிறார். அப்படி சொன்னதைக் கேட்டு அந்த பேட்மிட்டனை கபடியாக மாற்றி ஒரு கதையைத் தயார் செய்கிறார். முதலில் அதில் நடிக்க சொல்லி பவர்ஸ்டார் பவன்கல்யாணிடம் செல்கிறார் குணசேகர். ஆனால், பவன் மறுத்துவிடுகிறார். காரணம் சிரஞ்சீவியை வைத்து குணசேகர் எடுத்த ‘மிருகராஜூ’ தோல்வியடைந்திருந்தது. அடுத்து அவர் சென்றது மகேஷ் பாபுவிடம். அவர் ஓகே சொல்ல, துவங்கியது ஷூட். படம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த’ப் படத்துக்குப் பிறகு மகேஷுக்கு என தனியாக உருவான ரசிகர் வட்டம் மிகப் பெரியது.

அப்படியாப்பட்ட ஒக்கடு படம் பார்த்த விஜய், இதை தரணி ரீமேக் செய்வாரா என்று ரத்னத்திடம் கேட்டுள்ளார். ஒக்கடு படம் பார்த்த தரணியும் ரீமேக்குக்குச் சம்மதம் அளித்தார். ஆனாலும் ஹைதராபாத் சென்று இந்தப் படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு, இயக்குநரின் கருத்துகளை அறிய விரும்பியுள்ளார். எல்லாவற்றையும் முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளார். ‘ஒக்கடு’வின் கதையை கில்லிக்காக நிறைய மாற்றினார் தரணி. விஜய்யின் இன்ட்ரோ காட்சியில் கபடி கபடி கபடி என்ற பின்னணியுடன் வருவது, ஒக்கடுவில் கிடையாது. விஜய் வீட்டை ஏமாற்றிவிட்டு கபடி ஆட செல்வது போல, ஒக்கடுவில் இல்லை, ஓட்டேரி நரியோ, டுமீல் குப்பம் வௌவ்வாலோ, நெய் எடுத்துட்டுவா என டார்ச்சர் செய்யும் பிரம்மானந்தமோ ஒக்கடுவில் கிடையாது. அப்படி ஒரு ரீமேக்கை, தமிழ் ரசிகனுக்காக எந்த அளவுக்கு பக்காவாக கொடுக்க வேண்டுமோ அந்த அளவுக்கு ஸ்க்ரிட்டை ட்யூன் செய்திருந்தார்.

ரீமேக் தானே செய்யப் போகிறோம். எதற்காக கதையெல்லாம் சொல்கிறீர்கள் என்று கதை சொல்லப் போன தரணியிடம் கேட்டுள்ளார் விஜய். ஆனால் படம் பார்த்துவிட்டு தனக்குத் தோன்றிய மாற்றங்களையெல்லாம் கூறியுள்ளார் தரணி. முக்கியமாக ஒக்கடு படத்தில் இடம்பெற்ற இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றினார் தரணி. இந்த மாற்றங்கள் பிடிக்கவில்லையென்றால் ஒக்கடு கதையை யாரை வைத்து வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். விஜய்க்கு தரணி சொன்ன மாற்றங்கள் பிடித்ததால் கபடி ஆட்டம் நடந்தேறியது. கபடிக் காட்சிகள் நிறைய வருவதால் நிறைய கபடி ஆட்டங்களை நேரில் சென்று பார்த்துள்ளார் விஜய்யும் தரணியும். கபடி ராஜேந்திரன், குணசேகரன் என இரு பயிற்சியாளர்கள் விஜய்க்கும் அவருடைய நண்பர்களுக்கும் கபடி தொடர்பான பயிற்சிகளை விஜயா வாகினி ஸ்டூடியோவில் தினமும் அளித்துள்ளார்கள். மதுரை மீனாட்சி கோயிலில் எடுக்கப்பட்ட காட்சியை மிகவும் ரகசியமாக, மதுரை விஜய் ரசிகர்களுக்கே தெரியாமல் எடுத்துள்ளார்கள். அந்தக் காட்சியை எடுக்கும்போது கூட்டம் சேர்ந்துவிட்டால் காட்சியின் அழகே கெட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

அதிலும் இந்த கில்லி படம் எதிர்பார்த்ததை விட எகிறியடித்தது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு எதாவது ஒரு படம், தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் திரும்பி போகும் போது அந்தப் பட ஹீரோவின் ரசிகர்களாக மாற்றும் மாயத்தை செய்யும். அந்த மேஜிக்கை செய்தது கில்லி. படத்தைப் பார்க்க அத்தனை கூட்டம், எத்தனை ஸ்க்ரீன்களில் திரையிட்டாலும் குறையாத அளவுக்குக் கூட்டம். ‘இந்த ஏரியா, அந்த ஏரியா, அந்த இடம் இந்த இடம்’ என இன்ட்ரோ காட்சியில் பேசுவதாகட்டும், ‘தம்மாத்தூண்டு ப்ளேடு மேல வெச்ச நம்பிக்கைய உன் மேல வை’, ‘கபடி ஆடலாம், கில்லி ஆடலாம், க்ரிக்கெட் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் ஆனா, ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாதுடா’, எனப் படம் முழுக்க பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் தெறிக்கிறது. அப்பா ஆஷிஷ் வித்யார்த்தியை சமாளிப்பது, தங்கையை கலாய்ப்பது, அம்மாவை ஏமாற்றுவது என விஜயின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் வேற லெவல் ரீச்சைக் கொடுத்தது. (கட்டிங் கண்ணையா)

இன்னிக்கு ட்ரெண்டிங் ஆகி இருக்கும் கில்லி இயக்கிய தரணியை அழைச்சு வாழ்த்து சொல்லிட்டு ‘அந்த கில்லி படத்தை எடுக்கறச்சே இன்னிக்கு மறக்க முடியாத சம்பவம் ஏதுமிருக்கா? – அப்படீன்னு கேட்டபோ “கில்லி படம் இன்னிக்கும் ட்ரெண்டிங் ஆகும் போக்குதான் நான் மறக்க முடியா சம்பவம்.. இப்ப இருக்கற ச்டெக்னிக்கல் விஷயங்கள், கிராஃபிக்ஸ் மாதிரியான விஷயங்கள்லாம் அப்போ கிடையாது. எல்லாத்தையுமே செட் போட்டு எடுக்க மெனகெட்டது இன்னிக்கும் நினைவிருக்குது. அப்படி போட்ட செட் காட்சியில் எந்த இடத்துல சொதப்புனாலும் ஒட்டுமொத்த படமுமே சொதப்பிரும். லைட்ஹவுஸ் செட்ல இருந்து, விஜய் தங்கியிருந்த வீட்டு மொட்டை மாடி அமைக்கிறது வரைக்கும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப சவாலாதான் இருந்தது. அதே மாதிரி நான் ரொம்ப பயந்த விஷயம் படத்துல இருந்த ஸ்டன்ட் காட்சிகள். விஜய்ல ஆரம்பிச்சு, த்ரிஷா வரைக்கும் எல்லாருக்குமே ஸ்டன்ட் பண்ற மாதிரியான சீன்கள் இருக்கும்.’

இதை எல்லாம் தாண்டி கில்லி படத்துக்கு இசையமைத்த வித்யாசாகர், வசனம் எழுதிய பரதன், எடிட்டர் விஜயன், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், கல்யாண், சண்டைப் பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ், துணை இயக்குநர்கள், முக்கியமா ஒளிப்பதிவாளர் கோபிநாத் இவங்க எல்லாரோட அதீத அக்கறையாலேதான் படம் இந்த அளவுக்கு வெற்றிப் படமா அமைஞ்சது. என்னை நம்பி இந்தப் படத்தைப் பண்ணக் கொடுத்த ரத்னம் சாருக்கும் இன்னிக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றியை சொல்லிக்கிறேன். பாக்யராஜ் சாரும் படத்தைப் பார்த்துட்டு, ’ரொம்ப தைரியம் வேணும்யா சீனை மாத்துறதுக்கு, தப்பாச்சுன்னா உன்னுடைய கரியரே கேள்விக்குறியா ஆகிருக்கும், ரொம்ப நல்லா பண்ணிருக்க’னு வியந்து என்னைப் பாராட்டினதும் என்னால மறக்க முடியாது’ – அப்படீன்னார்

 

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/2bf5299a-01d8-4191-8103-c468367a2b07.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/04/2bf5299a-01d8-4191-8103-c468367a2b07-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரைப்படங்கள்நடிகர்கள்2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது....