மிடில் கிளாஸ் – திரை விமர்சனம்
நடுத்தரக் குடும்பங்களின் ஒட்டுமொத்த கனவே பணத் தேவையாகத்தான் இருக்கும். மற்றவர் முன் தங்களை உயர்வாக காட்ட விரும்பும் இவர்களில் சிலர் தங்கள் ஆடம்பர கனவுகளுக்கு வடிவம் கொடுத்து கடனில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அதிலும் குறிப்பாக உறவினர்கள் பணம் படைத்தவர்களாக இருக்க, அவர்களுக்கு இணையாக தங்களை காட்டிக் கொள்ளும் முனை ப்பில் இதே நடுத்தர குடும்பம் பந்தாவுக்கு செலவழித்து நொந்து போனதும் உண்டு. இதற்கெல்லாம் மேலாக பெருமைக்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுகிற மனைவி மட்டும் இதே நடுத்தர குடும்பத்தில் அமைந்துவிட்டால் கணவன் கடன் வாங்கியே காலாவதியாகி விடுவான்.
இங்கே நம் கதையின் நாயகனுக்கோ கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என் பது லட்சியம். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள். விஜயலட்சுமியோ ஒவ்வொரு பணத்தேவையின் போதும் கணவனை கரித்துக் கொட்டும் டைப். இருப்பினும் குடும்பம் சிதறி விடக் கூடாது என்பதற்காக அவமானங்களை தனக்குள்ளாக புதைத்துக் கொண்டு வாழ்கிறான் நாயகன்.
இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராமல் ஒரு கோடி ரூபாய் கிடைக்க இருந்து கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும் என்பது கதை.
நடுத்தரக் குடும்பத் தலைவர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் முனீஸ்காந்த். மனைவியிடம் அடங்கிப் போகும் இடத்திலும், பிள்ளைகளிடம் அன்பு காட்டும் இடத்திலும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவரை அப்படியே பிரதிபலிக்கிறார். தன் ஒரு கோடி கனவை கவனக்குறைவால் சிதைத்து விட்டதாக கணவரை வார்த்தைகளால் வாட்டி வதைக்கும் இடத்தில் ஒரு நடுத்தர கணவன் எப்படி இருப்பானோ அச்சு பிசகாமல் அப்படியே இருக்கிறார். அதுவே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி ஆகிவிடுகிறது.
நடுத்தரக் குடும்பத் தலைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமிக்கு அவரது நடிப்பு வாழ்வில் இது மறக்க முடியாத படமாக இருக்கும். அந்த
அளவுக்கு இயலாமை பிளஸ் ஆவேசம் கலந்த அந்த கேரக்டரை அவர் உள் வாங்கி வெளிப்படுத்தும் ஒவ்வொரு இடத்திலும் சுடர் விடுகிறது நடிப்பு. துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி, ஆட்டோ டிரைவர்
குரோஷி பொருத்தமான பாத்திர வார்ப்பில் கதையோடு பொருந்திக் கொள்கிறார்கள். நாயகனின் கிராமத்து நண்பராக காளி வெங்கட் சில காட்சிகளே என்றாலும் நினைவில் நிற் கிறார். பிரணவ் முனிராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை கதைக்களத்தின் தன்மையை நம் உணர்வுக்குள் கொண்டு வந்து விடுகிறது.
சுதர்சன் சீனிவாசனின் கேமரா ஆரம்பக் காட்சியிலேயே கிராமத்து வயலில் மகிழ்ச்சி பொங்க படுத்திருக்கும் முனீஸ் காந்த்தை காட்டி அப்ளாஸ் வாங்கி விடுகிறது. எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் முத்துராமலிங்கம். ஒரு நடுத்தர குடும்பத்தை கதை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் பரபரப்பு படபடப்பு சேர்த்து சுவையான அவியல் செய்திருக்கிறார் இயக்குனர். மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்கிற அந்த கிளைமாக்ஸ் மட்டுமே கோடி
பெறும்.
