தீயவர் குலை நடுங்க — திரை விமர்சனம்
கொஞ்ச இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு துப்பறியும் கதை. அதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸோடு சொல்லி இருக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் விசாரிக்கிறார். இந்த விசாரணை ஒரு கட்டத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷி டம் வந்து நிற்கிறது.
இந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியை. திருமணமாகாத இவர் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள பழகத் தொடங்குகிறார்.
இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் வருங்கால கணவராக கருதப்படும் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும்
தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறார்.
அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் அதே நபரால் கொல்லப் படுகிறார். யார் அந்த மர்ம நபர் ? கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கொலை பின்னணியில் தொடர்பு உண்டா?, கேள்விகளுக்கான விடை பரபர கிளைமாக்ஸ்.
கொலை வழக்கை விசாரிக்கும் துடிப்பான போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் அந்த கேரக்டரில் தனக்கே உரிய மாஸ் காட்டுகிறார். காவல்துறை சீருடை அணியாமல் போலீஸ் அதிகாரியாக தன்னை உணர வைக்கும் இடங்களில் அந்த கம்பீர உடல் மொழி அவருக்கே உரிய தனித்துவம். அதுவே விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று ஈர்க்கவும் செய்கிறது.
லிப்டுக்குள் தன்னை தாக்க வருபவரிடம் அவர் நடத்தும் அதிரடி சண்டை ஆக்ஷன் கிங் ஸ்பெஷல்.
நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சஸ்பென்ஸ் கேரக்டருக்குள் அற்புதமாக பொருந்திப் போகிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுமியாக அனிகா இயல்பான நடிப்பில் நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறார். உடல் அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று, முடியாமல் போகும் இடத்தில் அந்தப் பரிதாப பார்வை இதயத்தை துளைத்து விடுகிறது.
பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல. ராமமூர்த்தி கதைக் களத்தில் காட்சிகளோடு இணைந்து போகிறார்கள்.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் கேமரா ஆரம்பக் காட்சி தொடங்கி முடிவு வரை திகில் குறையாமல் பயணி க்கிறது. அந்த லிப்ட் சண்டைக் காட்சிக்காக கேமரா மேனுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்ஷ்மணன், உண்மை சம்பவம் ஒன்றை நெஞ்சம் நெகிழும் விதத்தில் சொல்லி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான இடைவேளை சஸ்பென்சும் எதிர்பார்த்திராத கிளைமாக்சும் இயக்குனருக்கு தனி அடையாளம்.
மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ நெஞ்சுக்குள் சந்தோஷப் புயல்.
