இரவின் விழிகள் – திரை விமர்சனம்
யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பிரபலமாகத் துடிக்கும் சிலர், அதில் தங்களை முன்னிறுத்த எந்த எல்லைக்கும் போய் விடுகிறார்கள். இதில் பெண்கள் தொடர்பான பாலியல் வக்கிரங்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக தன்மானம் இழக்கும் பெண்களின் சிலர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் உண்டு
அப்படிப்பட்டவர்களை பட்டியலிட்டு
மேலோகம் அனுப்புகிறார் ஒருவர். அவர் யார் ? இவர்களால் அவர் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டார் என்பதை திகிலும் திடுக்கிடலுமாக சொல்வதே இந்த ‘இரவின் விழிகள்’.
கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் வருகிறார். மஹேந்திரன். அறிமுக நாயகன் என்ற சுவடு இல்லாமல் இயல்பான நடிப்பில் காட்சிகளில் கடந்து போகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ராய் உயிருக்கு பயப்படும் காட்சிகளில்
யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறார்.
கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், தங்கை மீதான பாசத்தில் உருகுகிறார். அதே தங்கைக்காக ஆயுதம் ஏந்தும் காட்சிகளில் கண்களில் தெறிக்கும் அந்த ஆவேசம் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. பாசமிகு கிராமத்து அப்பாவாக
நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரியாக சேரன் ராஜ், போலீசாக சிசர் மனோகர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் படத்தின் உயிரோட்டத்திற்கு உதவுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார் இசையில் ‘கருப்பு’ பாடல் காட்சிக்கு வீரியம் சேர்க்கிறது. அஸ்மிதா ஆடும் குத்துப்பாடலும் ஓகே.
ஒளிப்பதிவாளர் பாஸ்கரின் கேமரா காடுகளின் அழகை கண்களில் கொண்டு சேர்க்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சிக்கல் ராஜேஷ், தற்போதைய சோசியல் மீடியா வேண்டாத விருந்தாளியாக வீட்டுக்குள்ளேயே வந்து உயிர் வேட்டை வரை சர்வசாதாரணமாக நடத்துவதை காட்சிப்படுத்தி இருக்கிறார். இவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, இவர்களை என்ன செய்தால் தகும் என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பி இருக்கிறார். சோசியல் மீடியா பிரபலங்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது, அந்த பட்டியலில் நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சிப்பது என்று திரைக்கதை பரபரப்பாக பயணித்தாலும், கிளைமாக்ஸில் அண்ணன் – தங்கை பாசம் மூலம் மனதை கலங்கடிக்கவும் செய்கிறார்.
மொத்தத்தில், ‘இரவின் விழிகள்’ இருட்டில் வெளிச்சம்.
