திரை விமர்சனம்

யெல்லோ – திரை விமர்சனம்

காதல் தோல்வி, தந்தை உடல்நலக் குறைவு என்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாயகி பூர்ணிமா ரவிக்கு மன அழுத்தத்தை கூட்டி வைக்க…
மன உளைச்சலோடு மல்லுக்கட்டும் மகளை அப்படி காண சசிக்காத தந்தை, மகளின் மனநிலையில் மாற்றம் காண விரும்புகிறார். பிடித்த இடத்துக்கு சுற்றுலா சென்று வர கேட்டுக்கொள்கிறார்.
மகளும் அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடி பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க..
இருவரும் இணைந்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த பயணம், அவர்கள் இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தது? நாயகி தேடிச் சென்ற நண்பர்கள் கிடைத்தார்களா? என்பதை பயணம் வழியே நம் மனம் சந்தோஷ நிறைவில் பொங்கி வழிய வழிய தருவதே இந்த ‘யெல்லோ’.
யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, சில படங்களில் நடித்திருந்தாலும் கூட இதில் தான்
அவருக்கு முழுமையான பாத்திரம் கிடைத்து இருக்கிறது அதுவும் நாயகி பாத்திரம். அதை அவரும் படம் முழுக்க சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம், நாயகி ஆளும் அழகு. நடிப்பும் அழகு.
ஆதிரை கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடும் பூர்ணிமா ரவி, ரொமான்ஸ், நடனம், ஆத்திரம் என நடிப்பின் அனைத்து ஏரியாவிலும் அடித்து ஆடியிருக்கிறார்.
நாயகியின் திடீர் தோழனாக வந்து அவரது அன்புக்கு பாத்திரமாகும் கேரக்டரில்
வைபவ் முருகேசன் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பயணத்தின் போது நாயகிக்கும் இவருக்குமான சின்ன சின்ன சண்டைகள் கூட அத்தனை அழகு.
சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி தங்கள் கேரக்டர்கள் மூலம் கதையுடன் நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறார்கள். இவர்களில்
பிரபு சாலமன் கேரக்டர் இன்னும் தனித்துவமானது.
பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கண்களையும் மனதையும் ஒருசேர வசீகரிக்கிறது.
படத்தில் கேமராவும் ஒரு பாத்திரம் போல் பயணிக்கிறது என்பதே உண்மை. ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்குக்கு இதற்காகவே ஸ்பெஷல் பொக்கே. கேரளா, கோவா என சுற்றுலாத் தளங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்
அதியற்புதம்.
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் சுக ராகம்.
ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை
அக்மார்க் அமர்க்களம்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன், இந்த சுற்றுலா கதையில் ரசிகர்களை சுற்றுலா பயணிகள் ஆக்கி கூடவே சந்தோஷமாய் பயணிக்க வைத்திருக்கிறார். கதையில் எளிமை. காட்சிகளில் வலிமை. சாலை வழி பயணத்தில் வழி தவறி விட்ட ஜோடி இரு தவறான மனிதரிடம் சிக்கி மீளும் காட்சி நிஜமாகவே மனதில் படபடப்பை ஏற்படுத்தி விடுகிறது.
-யெல்லோ, வான வில்லின் வர்ண ஜாலம்.