சினிமா செய்திகள்

இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்ட ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

தலைமுறைகள் கடந்தும் ஃபீல் குட் திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் எப்போதும் தனியிடம் பிடித்துள்ளது. அந்த வகையில், ரசிகர்களை மகிழ்விக்க ஃபீல் குட் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்.

மாபோகோஸ் கம்பெனி, பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா செளத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ராஜூ முருகன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் பிரவீன் சரவணன் பகிர்ந்து கொண்டதாவது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முஸ்தபா முஸ்தபா’. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய போராடும்போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும். எங்கள் படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குநர்கள் வெங்கட் பிரபு சார், ராஜு முருகன் சார் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

சென்னையில் 35 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்ட இந்த கதை சென்னை நகரத்தின் இயல்பு, அதன் நகைச்சுவை, பரபரப்பு மற்றும் இதயத் துடிப்பைப் படம்பிடித்து காட்டுகிறது. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்த இந்தப் படத்தில், கதையின் உணர்வுப்பூர்வமான தருணங்களை பிரதிபலிக்கும் நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ், வைஷாக், ஆண்டனி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் கானா பாலா ஆகியோர் தங்கள் குரல்களால் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

தி மாபோகோஸ் கம்பெனி பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் நவீனத்துவம், பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள இளம் திறமையாளர்களைக் கொண்ட படம்.