திரை விமர்சனம்

காந்தா – திரைவிமர்சனம்

திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
அந்த வரிசையில் ‘இதுதான் படம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆழமும் அகலமும் ஆன ஒரு படைப்பு இந்த காந்தா.
1950 களில் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் கொடி கட்டி பறப்பவர் டி.கே.மகாதேவன். (துல்கர் சல்மான்).அவரை தனது படம் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).
முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தேடி வர, அதுவரை அவர் நடித்த 10 படங்கள் தொடர் வெற்றியில் இணைகின்றன.
இப்போது
பல ஆண்டுகளுக்குப் பின் குரு சிஷ்யன் இருவரும் பிரபல படநிறுவனம் தயாரிக்கும் படத்தில் இணைகிறார்கள்.
அறிமுகப்படுத்திய நேரத்தில் இருந்தது போலவே துல்கர் சல்மான் இருப்பார் என்று எதிர்பார்த்த சமுத்திரக்கனிக்கு பெரும் ஏமாற்றம்.
முன் போல் இல்லை அவர். தனது இன்றைய இமேஜ்க்கு தக்கபடி கதையில் சில மாற்றங்கள் வேண்டும் என்கிறார். அதிர்ந்து போகும் குரு, சீடன் சொன்ன மாற்றங்களுக்கு உடன்பட மறுக்க, பாதியில் நின்று போகிறது படம்.
இதனால் அதிர்ந்து போகும் பட நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெயரை காக்கவாவது ஒன்றிணையுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறது.
இதனால் அந்தப் படம் மீண்டும் தொடங்குகிறது.
ஆனால் குருவின்
திரைக்கதையில் பல மாற்றங்களை
செய்தே ஆக வேண்டுமென்று அடம் பிடிக்கிறார் துல்கர். அதுவரை சாந்தா என்ற பெயரில் இருந்த அந்த படத்துக்கு காந்தா என்று என்று புதுப் பெயர் சூட்டுகிறார்.
இதை சற்றும் எதிர்பாராத சமுத்திரக்கனி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்.
ஆனாலும் படத்தை எடுத்து முடித்தாக வேண்டிய நெருக்கடி காரணமாக அமைதி காக்கிறார். ஏற்கனவே இயக்குனர் எழுதிய சோக கிளைமாக்ஸ் வேண்டாம் என்கிறார்.
ஆரம்பத்தில் துல்கரின் இந்த கதை மாற்றங்களுக்கு ஒப்புக் கொள்ளாத நாயகி பாக்யஸ்ரீ இயக்குனர் பக்கம் இருக்கிறார். எந்தவித ஆதரவும் இன்றி தடுமாறிக் கொண்டிருந்த பாக்ய ஸ்ரீயை தனது பட நாயகி ஆக்கியதால் அவருக்குள் அந்த குரு விசுவாசம் நிலைத்திருந்தது.
ஆனால் நாளாக நாளாக துல்கரின் காதல் வலையில் விழுகிறார் பாக்யஸ்ரீ. இவர்கள் காதல், துல்கரின் மனைவி காயத்ரிக்கு தெரிய வர, இதற்கிடையில் நான் கர்ப்பம் என்று பாக்யஸ்ரீ பீதியை கிளப்ப…
மனைவி குடும்பத்துக்கு தெரியாமல் காதலி கரம் பற்ற திட்டமிடுகிறார், துல்கர். காதலியிடம் நாளை காலை திருப்பதியில் நம் திருமணம். தயாராக இரு என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார் துல்கர்.
ஆனால் அன்று இரவே விபரீதம் நடந்து முடிகிறது. பாக்யஸ்ரீயின் அறைக்குள் நுழைந்த மர்ம மனிதன் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரண்டு தோட்டாக்கள் பாக்யஸ்ரீயின் மார்பை துளைக்க…
பாக்யஸ்ரீ பிழைத்தாரா … திருமணம் நடந்ததா., படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவந்ததா என்பது பரபரப்பு கிளைமாக்ஸ்.
ஏற்கனவே நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசன் வேடமேற்று சிறப்பாக நடித்திருந்த துல்கர் சல்மான், இந்தப்படத்திலும் அந்தக் காலத்துக் கதாநாயகனை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். நடிகர்களின் அந்தக் கால நடை உடை பாவனைகளை நடிப்பில் அவர் வெளிப்படுத்துவது தனி அழகு. கிளைமாக்சில் பாக்யஸ்ரீ யை மடி மீது தாங்கி கண்ணீர் மல்க அவர் வசனம் பேசும் இடங்கள் ரசிகர்கள் கண்களில் இருந்தும் கண்ணீரை கிளப்பும்.

படத்தின் இன்னொரு நாயகனாகவே இருக்கிறார் சமுத்திரக்கனி. சீடன் மீதான அவரது கோபம் வன்மமாக மாறும் இடங்கள் சமுத்திரக்கனியை புதுவிதமாக
திரைக்கு தந்திருக்கிறது. இன்னும் 50 வருடமானாலும் இந்தப்படம் இருக்கும். ஆனால் இப்போ நீ சொல்ற ஆடியன்ஸ் இருக்க மாட்டான் என்று துல்கரிடம் சீறுமிடம் தன்மான இயக்குனரின் அடையாளம்.
( குரு-சீடன் இருவருக்குமே விருதுகள் நிச்சயம்.)
நாயகியாக பாக்யஸ்ரீ, தூய தமிழில் வசனம் பேசி கவர்கிறார். ஆளும் அழகு.
நடிப்பும் அழகு.
சமுத்திரக்கனியி டமான அவரது குரு விசுவாசம் தனிரகம்.
காவல்துறை அதிகாரியாக வரும் ராணா டகுபதி காக்கிச்சட்டைக்கு புது ஷேப் கொடுத்திருக்கிறார்.
உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் கஜேஷ் நாகேஷ், (நடிகர் நாகேஷின் பேரன் இவர் ) ”அண்ணா…அண்ணா…” என்று அழைத்தே பார்வையாளர்களை ஈர்த்து விடுகிறார்.

துல்கர் சல்மானின் மனைவியாக காயத்ரி, நாயகனின் மாமனாராக நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் சிறிய வேடம் என்றாலும் தங்கள் கேரக்டர்களை நடிப்பில் நிலைநிறுத்துகிறார்கள்.
பாடல்கள், பின்னணி இசை இரண்டிலுமே புது ராஜபாட்டை போட்டிருக்கிறார் இசையமைத்த ஜானு சந்தர்,
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் கேமரா அந்த கால சினிமா ஸ்டூடியோவுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.
கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை நையாண்ட
விதத்தில் அறிமுகப் படத்திலேயே தேர்ந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார், ராமலிங்கம். அந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ் நிச்சயம் அரங்குகளை
உலுக்கி விடும்.

-காந்தா, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத பெருமைக்குரிய அடையாளம்.

RATING – 3.5 /5