தடை அதை உடை – திரை விமர்சனம்
1990 களில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருட காலமாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் குணா பாபு, தயாரிப்பாளரிடம் இந்த உண்மை சம்பவத்தை கூறுகிறார். அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்காததால் நிராகரிக்கிறார். அதனால், அவர் வேறு ஒரு கதையை தயார் செய்து சொல்கிறார். ஆனால் அதுவும் நிராகரிக்கப்பட.. மீண்டும் கதை சொல்ல முயற்சிக்கிறார்.
இதிலாவது அவர் வெற்றி பெற்று இயக்குநர் ஆனாரா என்பது கதை. இப்போது அவர் உருவாக்கிய கதைக்கு வருவோம்.
ஏழைத் தந்தை ஒருவர் அந்தஊர் பெரிய மனிதர் ஒருவரிடம் வாங்கிய கடனுக்கு காலத்துக்கும் அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயம். அவர் மட்டுமல்ல அவரது குடும்ப வாரிசுகளும் அந்தக் குடும்பத்துக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த குடும்பத்துக்கு கல்வி மறுக்கப்படும். அதற்கு பதிலாக தங்கள் ஆடு மாடுகளை மேய்க்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் அதை மீறி அந்த ஏழைத் தந்தை தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கப் போராடுகிறார். இது விஷயம் தெரிந்த பிறகு பணக்காரன் குடும்பம் சும்மா இருக்குமா… ஆனால் அதையும் மீறி ரத்தச் சேற்றில் குளித்த நிலையில் பள்ளிக் கூட வாசலைத் தொடுகிறான், அடிமை குடும்பத்து சிறுவன் ஒருவன். அவன் எப்படி கல்வியில் சிறந்து வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறான் என்பது ஒரு கதை.
முதல் படமாக இதை எழுதி இயக்கித் தயாரித்துள்ள அறிவழகன் முருகேசனுக்கு இது முதல் முயற்சி. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து அவன் முன்னேற வேண்டும் என்ற கருத்து தான் இந்தப் படம் சொல்ல வந்த விஷயம். அதை தெளிவாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர்
அறிவழகன் முருகேசன். கதை சுவாரஸ்யம் மட்டுமின்றி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு மற்றும் கதை சொல்லலில் புதிய பாணி என ரசிக்க வைத்திருக்கிறார்.
அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் சிலர் ஏற்கனவே சில படங்களில் நடித்திருப்பவர்கள். மற்றவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நேர்த்தியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம், கெளதமி, சுபாஸ்ரீ, சூரியப்ரதாபன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்கள் கேரக்டர்களில் நிரம்பி நிற்கிறார்கள்
இசையமைப்பாளர் சாய் சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்குள் ஜனரஞ்சக ராகம். ஒளிப்பதிவாளர்கள் தங்கப்பாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோரது கேமரா பழைய காலகட்டம், தற்போதைய காலகட்டம் இரண்டையும் நேர்த்தியான ஒளிப்பதிவில் கண்களை நிர ப்புகிறது.
கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியிருப்பதோடுபடத்தை
தயாரிக்கவும் செய்திருக்கும் அறிவழகன் முருகேசன், வித்தியாசமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராகி விட்டார்.
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளை சொல்லி எச்சரிப்பவர், அதனை ரசிகர்கள்
சிரிக்கும்படி சொல்லியிருப்பது படத்தின் ரசனைக்கு உத்தரவாதம்.
மொத்தத்தில், ‘தடை அதை உடை’ அநியாயத்தை ஆக்கிரமத்தை ஏற்றத்தாழ்வை அடித்து நொறுக்கும் என்பது நிச்சயம்.
