கேம் ஆப் லோன்ஸ் –திரை விமர்சனம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் ஆஃப் ஒன்றில் கடன் வாங்குகிறான் நாயகன். அந்த கடனால் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடியை கதை யாக்கி இருக்கிறார்கள்.
கடன் கொடுத்த வங்கியில் இருந்து தேடி வந்த இருவர் லட்சங்களில் இருக்கும் கடனை கட்ட முடியாவிட்டால் தற்கொலை ஒன்றே அதற்கு தீர்வு என்று மெதுமெதுவாக நாயகன் மனதை மாற்ற முயல் கிறார்கள்.
மனைவிக்ku தெரியாமல் வாங்கிய கடன் என்பதால் தற்கொலை செய்து கொண்டால் கூட அந்த கடனை மனைவி கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அழுத்தம் தருகிறார்கள்.
விடாப்பிடியான அவர்களின் வார்த்தை ஜாலத்தில் குழப்ப மனநிலைக்கு போன நாயகன், அவர்கள் தந்த அழுத்தத்தின் பேரில் தற்கொலை செய்து கொண்டானா? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாளியானவர் தற்கொலை என்ற செய்தியை நம்மில் பலர் செய்தியாக மட்டுமே எண்ணி கடந்து போகிறோம்.
ஆனால், இந்த படத்தை பார்த்தால் அந்த தற்கொலைகளுக்கு பின்னணியில் இப்படியும் சிலர் இருக்கலாம். அவர்களை தற்கொலைக்கு தூண்டி இருக்கலாம் என்று யோசிக்க வைத்திருக்கிற விதத்தில் கதையோடு சமூக அக்கறையும் இணைந்து கொள்கிறது. வருமானம் இல்லாத நிலையிலும் கன்னா பின்னாவென கடன் வாங்கி மாட்டிக்கொண்டு முழிக்கும் கேரக்டரில் நிவாஸ் ஆதித்தன். ஆரம்பக் காட்சிகளில் சற்றே தடுமாறினாலும் போகப் போக அந்த இக்கட்டான சூழலை அழகாக நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்.
முதலில் டார்ச்சர், அப்புறமாய் தற்கொலைக்கு தூண்டுதல் என வங்கி அதிகாரிகள் இருவரின் மனரீதியான டார்ச்சரால் ஏற்படும் குழப்ப மனநிலையையும் நடிப்பில் அழகாக பிரதிபலிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் அந்த கேரக்டரை ஜீவனு ள்ளதாக்குகிறார். அவரது உதவியாளராக வரும்
அத்விக்கும் அளவான வில்லத்தனத்தில் கவருகிறார்.
நிவாஸ் ஆதித்தனின் மனைவியாக நடித்திருக்கும் எஸ்தர், பொறுப்பற்ற கணவனை வெறுத்த போதிலும் பொறுத்துப் போகும் இல்லத்தரசிகளை நடிப்பில் பிரதிபலிக்கிறார். படத்தில் இவருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் வந்தவரை நிறைவு.
இசையமைப்பாளர் ஜோ கோஸ்டா, தனது பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார். கூடவே திகிலூட்டியும் இருக்கிறார்.
ஒரே இடத்தில் நகரும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளர் சபரி, நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகளை கண்முன் விரிக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அபிஷேக் லெஸ்ஸி, பய உணர்வே இல்லாமல் கடன் வாங்கி திரும்ப கட்ட முடியாதவர்கள் இப்படிப்பட்ட மன நெருக்கடிக்கும் ஆளாக்கலாம்
என்பதை எச்சரிக்கை மணி அடித்து சொல்லி இருக்கிறார்.
ஆன்லைன் சூதாட் டம் மூலம் பணத்தை இழப்பவர்கள், அதற்காக ஆஃப் மூலம் எளிதாகவும், உடனடியாகவும் கிடைக்கும் கடனை பெற்று, கடைசியில் அதையும் கட்ட முடியாமல் எப்படி படுகுழியில் தள்ளப்படுகிறார்கள் என்று சொன்ன விதத்திலும் சமூக அக்கறை படத்தின் நோக்கத்தை உயர்த்துகிறது.
நாலு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆன்லைன் சூதாடிகளை கடன் வாங்க யோசிக்க வைக்கும் விதத்தில்
சொன்னதற்காக இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல்
பொக்கே.
படத்தின் நீதி :
இனிமே ஆன்லைன்ல கடன் வாங்குவீங்க…?
