பைசன் — திரை விமர்சனம்
வன்முறை
வாடிக்கை ஆகிப் போன தென் மாவட்ட கிராமம் ஒன்றில் இருந்து
தடைகளை உடைத்து தனது லட்சியமான கபடி விளையாட்டில் தேசத்துக்கே பெருமை தேடித் தந்த ஒரு இளைஞன் கதை.
தென் மாவட்டங்களில் 90-களில் நடந்த சமூக மோதல்கள் அந்தப் பகுதி மக்களை குறிப்பாக இளைஞர்களை ரொம்பவே பாதித்தது. பல இளைஞர்களின் எதிர்காலம் அரிவாள் வீச்சில் முடிந்து போனது. இப்படிப்பட்ட கிராமத்திலிருந்து தனது கபடி கனவை நனவாக்க போராடும் ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். அந்த
நாயகனாக துருவ் விக்ரம் படம் முழுக்க நடிப்பால் வியாபித்து நிற்கிறார்.
அவரை நடிகராக ஒரு காட்சியில் கூட பார்க்க முடியவில்லை. அந்த கபடி வீரன் கேரக்டரில் வீறு கொண்ட வேங்கையாக சீறிப் பாய்கிறார். கபடி விளையாடக்கூடாது என்று சத்தியம் வாங்கும் தந்தையி டம் அவர் சத்தியம் செய்யும் அந்த நொடியும்,
ஒரு கட்டத்தில் அவரே கலவர பூமியின் கனம் தாங்காமல் இனி விளையாடப் போவதில்லை என்று முடிவெடுக்கும் தருணத்திலும் நடிப்பே தெரியாத அந்த நடிப்பு பிரமிக்க வைக்கிறது.
பைசன் என்ற தலைப்புக்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதே அந்த கேரக்டரோடு நம்மை நெருக்கமாக்கிக் கொள்கிறது.
தாதாவான லால் இருப்பிடத்துக்கு துருவ் விக்ரம் தனது விளையாட்டு தொடர்பாக வந்திருந்த நிலையில், எதிரி முகாம் ஆட்கள் மோப்பம் பிடித்து திடீர் தாக்குதல் நடத்த, அந்த தாக்குதலுக்கு பின்னணியில்
துருவ் தான் இருக்கிறார் என்று லாலின் அடியாட்கள் லாலை நம்ப வைக்க முயல… தன் மீதான சந்தேகப் பார்வைக்கு துருவ் காட்டும் ரியாக்ஷன் ‘நீ நடிகன்டா’ சொல்ல வைக்கிறது.
துருவ் விக்ரமின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி, வன்முறை தாக்குதலில் சிக்கி மரண பயத்தில் வாழ்ந்து வரும் நேரத்திலும் மகனின் எதிர்காலம் கருதி அவற்றை சகித்துக் கொள்ளும் இடங்கள் அத்தனையும் தேசிய விருது வரை அவரைக் கொண்டு சேர்க்கும். மகனின் எதிர்காலத்துக்காக போலீஸிடம் கெஞ்சும் அந்த அப்பா, நடிப்பில் அப்பப்பா…!
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அவரது ஆவேச அப்பாவாக நடித்திருப்பவர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் அருவி மதன், இயக்குநர் அமீர், லால், ரேகா நாயர் சரியான தேர்வில் தங்கள் கேரக்டர்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள் அனைத்தும் இசைப் பரவசம். பின்னணி இசையும் உயிரோட்டம்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசுவின் காமரா தென் மாவட்ட நிலப்பரப்பை கண் முன் நிரப்புகிறது.
எழுதி இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ், சாதிய வெறி பிடித்த கலவர பூமிக்குள் கபடி விளையாட்டு மூலம் தேசத்துக்கு பெருமை சேர்த்த இளைஞனை கதைக்களமாக்கி சடுகுடு ஆடியி ருக்கிறார். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் கதையை திரைக்குள் கொண்டு வந்து ஒரு வரலாறுக்கு தன் மனம் திரை வரலாறு தந்து இருக்கிறார்.
அந்த வகையில் இந்த பைசன், வாழும் வரலாறு.
