திரை விமர்சனம்

மருதம் – திரைவிமர்சனம்

விவசாயிகள் நிலத்தை அவர்களுக்கே தெரியாமல் ஆட்டையை போடும் வங்கிகள் தான் கதைக்களம். ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வருகிறார் விவசாயி கன்னியப்பன். நல்ல மகசூல் போதிய வருமானம் என்று போய்க் கொண்டிருக்கும் சந்தோஷ வாழ்க்கையில் ஓர் பேரிடி விழுகிறது. வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, நியாயம் நஹி. இது குறித்து காவல்துறையில் அவர் கொடுக்கும் புகாரும் கண்டுகொள்ளப்படாமல் போக…
இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணரும் கன்னியப்பன்,
மோசடியின் பின்னணியை கண்டறிந்து, நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். நிலத்தை இழந்துவிட்டு வருந்துவது, அதே நிலத்தை மீட்க சட்ட ரீதியிலான போராட்டம் என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். பல இடங்களில் வசனம் இல்லை என்றாலும், தனது எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே தன் மன ஓட்டத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி தனி நபராக படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரக்‌ஷனா, வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நெஞ்சில் ஈரம் உள்ள மனிதர்களை நினைவுப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார் அருள்தாஸ்.

நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமாகி சில இடங்களில் சிரிக்க வைக்கும் மாறன் கிளைமாக்ஸ் இல் கலங்கவும் வைக்கிறார்.
வங்கி மேலாளர் வேடத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, வில்லத்தனமான நடிப்பை தனது பார்வையால் சுமந்து இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் வழக்கறிஞராக மக்கள் மனதில் நிற்கிறார் இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்.

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களில் கிராமத்து மண்ணின் வாசம். பின்னணி இசையில் கதையின் கனத்தை நமக்குள் கடத்தி விடுகிறார்.
ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரம், கிராமத்தின் இயல்பான அழகை கேமரா வழியே நம் கண்களுக்கு நெருக்கமாக்கி விடுகிறார்.

அப்பாவி விவசாயிகளின் நிலங்களை அவளுக்கே தெரியாமல் அபகரிக்கும் கும்பல் பற்றிய கதைக் களத்தில் காட்சிகளின் நேர்த்தியில் நின்று களமாடுகிறார் இயக்குனர் வி. ராஜேந்திரன். அந்த நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் படத்தை வெற்றிப்பாதையில் கொண்டு சேர்த்து விடுகிறது.

விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவதும், அதனால் பலர் உயிரிழப்பதும் நாம் செய்திகளாக படித்து விட்டு கடந்து போவதுண்டு. ஆனால், அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் ஆதாரமான அவர்களது நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் மிகப்பெரிய மோசடி பற்றி தோலுரி க்கும் முயற்சியாக எழுதி இயக்கியிருக்கிறார் வி.கஜேந்திரன்.
இந்த மருதம் அள்ளிப் பருக வேண்டிய அமுதம்.