இட்லி கடை – திரை விமர்சனம்
தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் சிவநேசன் ( ராஜ் கிரண் ) இட்லி கடை தான் ருசியின் அடையாளம். ஆட்டுக்கல்லில் அரிசி உளுந்தை அரைத்து ஆவி பறக்க அவர் சுட்டுப் போடும் இட்லிக்கு சுற்று வட்டார ஊர்களின் அத்தனை நாக்குகளும் அடிமை.
தனது வயதான காலத்தில் தன் ஒரே மகன் முருகனும் ( தனுஷ்) இந்த தொழிலை தாங்கி பிடிப்பான் என்று நம்புகிறார் அப்பா சிவனேசன். ஆனால் முருகனுக்கு வெளியூர் சென்று லட்சங்களில் பணம் பார்க்க ஆசை. மகனின் விருப்பத்தை மென்மையாய் அப்பா சிவனேசன் மறுக்க, அப்படியானால் இதே இட்லி கடையை பல கிளைகளாக வெளியூர்களில் விரிவுபடுத்துவோம் என்று மகன் சொல்ல, அப்படி செய்தால் இதே ருசியை எல்லா ஊரிலும் கொடுக்க முடியாது என்று சிவனேசன் அதற்கும் தடை போட, கேட்டரிங் முடித்து பாங்காங்க்கில் ஸ்டார் ஹோட்டல் பிசினஸில் கொடி கட்டி பறக்கும் சத்யராஜ் கம்பெனியில் வேலையில் சேர்கிறார் முருகன். படிப்படியாக தனது திறமை மூலம் முதலாளியின் மனதுக்கு நெருக்கமாகிறார். அப்படியே முதலாளி மகள் மனதிலும் இடம் பிடிக்கிறார். அப்பாவும் இந்த காதலை அங்கீகரி க்க…
ஒரு சுபதினத்தில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமண நாள் குறிக்கப்படுகிறது . இந்நிலையில் எதிர்பாராமல் முருகனின் தந்தை ஊரில் இறந்து போக, வருங்கால மாப்பிள்ளையை அரைகுறை மனதுடன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். ஊருக்கு வந்த பின் நிலைமை அப்படியே தலைகீழாகிறது. அப்பாவை தொடர்ந்து அம்மாவும் இறந்து போக.. இப்போது ஊரிலேயே அப்பாவின் இட்லி கடையை மீண்டும் தொடங்கி நடத்த முடிவு செய்கிறான் முருகன்.
இந்த தகவல் தெரிய வந்ததும் மணப்பெண்ணின் அண்ணன் அஸ்வின் ( அருண் விஜய் ) அந்த கிராமத்துக்கே வந்து முருகனை தாக்குகிறார். பதிலுக்கு முருகன் தாக்கியதில் அஸ்வினுக்கு கால் உடைந்து போக… பிரச்சனை இன்னும் பெரிதாகிறது. சிக்கலான இந்த நிலைமை சீரானதா… முருகனின் திருமணம் என்னவானது? என்பது பரபர கிளைமாக்ஸ்.
முருகனாக தனுஷ்.
வெளிநாட்டில் கோட் சூட் போட்டு கம்பீரமாக வலம் வரும் தனுஷ், கிராமத்தில் வேட்டி சட்டையில் கிராமத்து இளைஞனாக அப்படியே மாறிப் போகிறார். தந்தையின் இறப்புக்கு பிறகு தந்தையின் இட்லி கடையை தொடர முடிவு செய்யும் இடத்தில் தொடங்கி அவரது ஒவ்வொரு செயல்பாடும் இயல்பான நடிப்பின் அடையாளம். கிராமத்தில் தனது பள்ளிக்கால சினேகிதி நித்யா மேனனை மனதுக்குள் காதலாய் அணுகும் ஒவ்வொரு இடங்களும் காதல் பூக்கும் அழகான தருணங்கள்.
தனுஷின் தந்தை சிவனேசனாக ராஜ்கிரண். அகிம்சையே ஆயுதம் என்று மகனுக்கு போதிக்கும் இடத்தில் அனுபவ நடிப்பு பேசுகிறது. கிராமத்து நாயகியாக வரும் நித்யா மேனன், கனமான நடிப்பில் காட்சிகளில் நிறைந்து தெரிகிறார். இது தன் மீதான பரிவு மட்டும் தானா, அல்லது காதல் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பள்ளிப் பருத்தில் அவர் வாங்கித் தந்த முத்துமாலையை நினைவூட்டும் இடம் மேன்மையான காதலின் அடையாளம்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டே, கிராமத்துக்கு வந்த இடத்தில் தனுசை சந்திக்கும் இடம் வெல்ல முடியாத காதலை சொல்லிப் போகிறது.
கோடீஸ்வர தொழிலதிபராக சத்யராஜ், தன் மகனுக்கு பளார் விடும் இடம் சூப்பரப்பு.
ஏரியா இன்ஸ்பெக்டராக பார்த்திபன் தனது நடிப்பின் மூலம் அசத்துகிறார். தனுஷின் இட்லி கடைக்கு ஆப்பு வைக்க சத்யராஜ் முயல, அப்போது பார்த்திபன் வைக்கும் ட்விஸ்ட் இன்னொரு சூப்பரப்பு. சமுத்திரக்கனி உள்ளூர் சண்டியராக கெத்து காட்டுகிறார்.
கிட்டத்தட்ட தனுஷூ டனேயே பயணிக்கும் கேரக்டர் இளவரசுக்கு. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். பெற்ற தாய்க்கு தன்னை அடையாளம் தெரியாததை உணர்ந்து உள்ளூர உடைந்து போகும் இடத்தில் குணச்சித்திர நடிப்பில் ஜொலிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசையிலும் பின்னியெடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக்கின் கேமரா கிராமத்தையும், வெளிநாட்டையும் கண்களுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நடிப்போடு எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் தனுஷ். கிராமத்து இட்லி கடை பின்னணியில் மண் மணமிக்க கதையை உணர்வு பொங்க தந்து இருக்கிறார்.
அகிம்சையே சிறந்த ஆயுதம் என்ற தனது தந்தையின் தாரக மந்திரத்தை கதை நெடுக முன்னிலைப்படுத்தி இருப்பது சிறப்பு. சுயநலத்துக்காக பெற்றவர்களை தனியாக விட்டுப் போகும் பிள்ளைகள் மீதும் சவுக்கை சுழற்றி இருக்கிறார்.
மொத்தத்தில், சூடும் சுவையுமான இட்லி.
