KISS – திரை விமர்சனம்
நமது நாயகன் கவினுக்கு ஒரு விசேஷ பவர். எங்காவது காதல் ஜோடிகள் முத்தமிடுவதை பார்த்தாலே அவர்களின் பிந்தைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மின்னலாக வந்து போகும். அதனால் காதல் என்றாலே அவரை யும் அறியாமல் ஒருவித பயம் வந்து விடுகிறது. ஒருவேளை நமக்குள்ளும் காதல் வந்துவிட்டால் நம் பிந்தைய கதை தெரிய வரும். அது விபரீதமாக இருந்து விட்டால் எஞ்சியுள்ள நாட்கள் நரகமாகிவிடும். அதனால் தேடி வந்த காதலையும் போ போ என்கிறார் ஆனால் இதையெல்லாம் | தாண்டி அவருக்குள் பூ பூக்கிறது காதல். ஒரு சந்தர்ப்பத்தில் காதலி நம் நாயகனுக்கு அன்பாய் ஒரு முத்தம் தர…
இப்போது நாயகனின் பார்வையில் காதல் ஜோடிகளான இவர்களின் எதிர்காலம் கண்முன் வந்து போகிறது.அது மோசமான எதிர்காலத்தை காட்டுகிறது. இதனால் பயந்து போகும் நாயகன் காதலுக்கு டாட்டா காட்டி விடுகிறான். இதனால் காதலி பகை ஆகிறாள். அவர்கள் காதல் என்னவாகிறது? மீண்டும் காதலியுடன் இணைந்தாரா என்பதை கொஞ்சம் ட்விஸ்ட் கொடுத்து கலகலப்பு சகிதம் சொல்லி இருக்கிறார்கள் .
காதலை வெறுப்பது, காதல் வந்த பிறகு காதலியை பிரிவது, அதன் பிறகும் காதலியின் குடும்பத்துக்கு ஒன்று என்றால் துடிப்பது, மறுபடியும்
காதலியின் அன்புக்கு ஏங்குவது இப்படி ஒவ்வொரு சூழலுக்கான உணர்வுகளையும் நடிப்பில் அழகாக கொண்டு வந்து விடுகிறார் நாயகன் கவின்.
அயோத்தி நாயகி ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான வேடம். காதலனுக்கு திடீர் முத்தம் கொடுத்த சம்பவத்தில் காதலன் தந்த விளக்கம் தன்னை கொச்சைப்படுத்துவதாக உணர்ந்து அவமானத்தில் துடித்துப் போகும் இடம் இவர் நடிப்புக்கான மகுடம்.
ஆர்ஜே.விஜய், விடிவி கணேஷ் படத்தின் காமெடி போர்ஷனை பங்கு போட்டு பிரித்துக் கொள்கிறார்கள்.
நாயகனின் பெற்றோராக ராவ் ரமேஷ்-தேவயானி சிறப்பான நடிப்பில் கவர்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் பிரபு, கெளசல்யா தங்கள் கேரக்டர்களின் கனத்தை கதைக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். ஹரீஷ் கண்ணணின் ஒளிப்பதிவில் காட்சிகளில் இளமைத் துள்ளல்.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் அழகுற தாங்கி நிற்கிறது..பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கிறார்.டைட்டில் போடும்போதே விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் முன் கதையாக நாயகன முன் ஜென்மக்கதையை சொல்லி விடுகிறார்கள் இளமை ததும்பும் திரைக்கதையை முடிவு வரை டெம்போ குறையாமல் இயக்கிய இயக்குனருக்கு ஸ்பெஷல் பொக்கே.
உதட்டை அல்ல, மனதைக் கவ்வும்
கிஸ் இது.
