சக்தித் திருமகன் – திரை விமர்சனம்
தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவார். வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஆட்டையை போடும் ஒருவர், அமைச்சருக்கே நெருக்கமானவராக இருந்தாலும் அவரும் விஜய் ஆண்டனிடம் சிக்கினால் கதை கந்தல் தான். அவரது அடுத்தடுத்த அணுகுமுறையில் ஓடோடி வந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைப்பார். இப்படி கிடைக்கிற கமிஷனில் சில பல சமூக சேவைகளையும் ஓசைப்படாமல் செய்து வருகிறார். இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் இவர் தான் என்ற இடத்தில் இருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் ( ஒரிஜினல் பெயர் சுனில் கிருபாளினி) விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.. அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பது தான் இந்த சக்தித் திருமகன்.
பெரிய பெரிய வேலைகளைச் செய்துவிட்டு அப்பாவி முகம் காட்டும் கேரக்டரில் விஜய் ஆண்டனி வெளுத்து கட்டுகிறார். ஒன்றுமே தெரியாதது போலான அந்த முக பாவனை இந்த கேரக்டரோடு அவரை ரொம்பவே இணைத்துக் கொள்கிறது. தலைமைச் செயலகத்தில் இடைத்தரகராக இருந்து வரும் விஜய் ஆண்டனி, எந்த வேலையாக இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார்.
தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும், அதை அவர் அணுகும் விதமே தனி. இதே தொழிலில் டெல்லியில் லாபி பண்ணிக் கொண்டிருக்கும் சுனில் கிருபாளினி க்கு விஜய் ஆண்டனியின் இந்த வளர்ச்சி பிடிக்காமல் போக, அவருக்கு செக் வைக்கிறார். 4000 கோடிக்கு மேலான அவரது பணம் கைப்பற்றப்படுகிறது டெல்லி புரோக்கரின் கைத்தடி அதிகாரிகளும், அடியாட்களும் விஜய் ஆண்டனியை கொல்ல சமயம் பார்க்கிறார்கள்.
இதனால் தலைமறைவாக இருந்து கொண்டு தொழில் நுட்ப ரீதியில் டெல்லி புரோக்கருக்கு குடைச்சல் கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி எதிரிகள் கையில் சிக்கினாரா? அல்லது டெல்லி புரோக்கரின் அரசியல் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததா என்பது பரபரப்புடன் கூடிய திரைக்கதை.
நாயகனாக வரும் விஜய் ஆண்டனி அந்த புரோக்கர் கேரக்டரில் புதுவித மேனரிசத்துடன் நடிப்பில் அற்புதமாக வெளிப்பட்டு இருக்கிறார். அதிகம் பேசாத அந்த கேரக்டர் இவரின் நடிப்பில் ஆயிரம் விஷயம் பேசுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிருபளானி, சமகால அரசியல் நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் கோடிகள் புரள்வதையும் அசால்ட் டாக கையாளும் இடங்கள் அத்தனையும் இவர் நடிப்பில் சிறப்பான இடங்கள்.அவரது திமிரான பேச்சும், அரசியல் பின்புலமும் அந்த கேரக்டருக்கான பலத்தை கூட்டி விடுகிறது. நாயகியாக நடித்திருக்கும் திருப்தி. அதிகம் பேசாமலே உணர்வுகளை கடத்தி விடுகிறார். கணவர் விஷயத்தில் எதை நம்பலாம் எதை நம்பக் கூடாது என்பதை படிப்படியாய் தெரிந்து கொள்ளும் இடங்களில் பாதி நடிப்பை இவரது கரிய பெரிய கண்களே தந்து விடுகிறது
நாயகனின் நண்பன் மாறனாக செல் முருகன் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி போகிறார். விஜய் ஆண்டனியை பிடிக்க ஸ்பெஷல் ஆபீசராக வரும் கிரண் குமார், கவனிக்க வைக் கிறார்.
ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், அதில் அவர்கள் பங்களிப்பும் சூப்பர். ஷெல்லி ஆர்.கேலிஸ்ட்டின் கேமரா காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணிக்கிறது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது.
எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக அதுவும் ஆணி அடித்து சொல்லியிருக்கிறார். தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி. உள்பட அரசு திட்டங்களினால் சாதாரண மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வு பொங்க பட்டியலிட்ட விதம் சூப்பர். பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் கோடியில் குளிக்க, ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க தூண்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு. இந்த வகையில்
இந்த ‘சக்தித் திருமகன்’ மக்களை சிந்திக்க வைக்கிறான்.
வெற்றித் திருமகன்.
