தண்ட காரண்யம் – திரை விமர்சனம்
நக்சல் பாரிகள் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை போலி என்கவுண்டரில் அதிகார வர்க்கம் போட்டுத்தள்ளிய கதை. உண்மை சம்பவத்தை அதன் உணர்வுக்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் தந்திருக்கிறார்கள். எளிய மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அதிகார வர்க்கம் போடும் ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுவதே இந்த ’தண்டகாரண்யம்.’
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவப்பட்டு என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் .
அந்த ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் தினேஷ், கலையரசன்.
கலையரசன் வனத்துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்..உள்ளூர்ப் பெண் பிரியாவோடு காதலும் உள்ளது. வேலை நிரந்தரமானதும் திருமணம் என்ற கனவோடு காதலர்கள் காத்திருக்க.,.
நடந்தது வேறு.
அண்ணன் தினேஷால் ஒரு பிரச்சினை ஏற்பட, அதுவே தம்பியின் வேலை இழப்புக்கு காரணமாகிறது. இந்த நேரத்தில் கலையரசன் ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் வழிகாட்ட இருந்த ஒரே வீட்டையும் விற்று சில லட்சங்கள் பணத்தைக் கட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்று ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்கிறார். அங்கே பயிற்சிகள் கடுமை. சின்ன தவறுக்கும் அடி உதை என்று கொடுமை. அங்கே போன பிறகு தான் தன்னுடன் பயிற்சி பெறுபவர்கள் முன்னாள் நச்சல்பாரிகள் என்று தெரிய வருகிறது. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டுச் சரணடைந்த அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி ,வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தை கூறி அங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.

நச்சல் பாரிகள் என்று ஒப்புக்கொண்டால் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் சொல்ல… வேறு வழியில்லாமல் கலையரசனும் பால சரவணனும் ஒப்புக்
கொள்கிறார்கள்.
இந்த நேரத்தில் அப்பகுதி மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிறது. வெளியே நக்சல் பாரிகளின் தொல்லை ஆளும் அரசின் வாக்குகளை சிதைத்து விடுமோ என்பது ஆள்வோரின் கவலையாக இருக்க, பிரச்சினையைச் சமாளிக்க ராணுவ பயிற்சி பெற்ற இந்த இளைஞர்களில் பலரை கொன்று குவித்து நச்சல் பாரி களைக் கொன்றதாக கணக்கு காட்டி பொது மக்களின் பதட்டம் குறைக்கிறது அதிகாரம் மையம்.
இந்நிலையில் நக்சல் பாரிகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவருமே இங்கிருந்து ராணுவ பயிற்சி பெற்றுப் போன இளைஞர்கள் என்பது பத்திரிகை செய்திகள் மூலம் தெரிய வர, ராணுவப் பிடியிலிருந்து தப்ப கலையரசன் முயற்சி செய்கிறார் .ஆனால் எந்த வழி சென்றாலும் அந்த வழியை அடைக்கிறார்கள்.எப்படியும் தப்பித்து வெளியேற முயற்சி செய்யும் அவர், அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? ஊரில் உள்ள மக்களுக்கு என்ன ஆகிறது? உயிருக்கு உயிரான காதல் என்ன ஆகிறது என்பது படத்தின் மீதிக்கதை.
தண்டகாரண்யம் என்றால் காடு என்று பொருள். படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் காடுகளிலும்n காடுகளுக்கு நடுவில் உள்ள ராஞ்சி ராணுவப் பயிற்சி மையத்திலும் நடைபெறுகிறது. ராணுவப் பயிற்சி மையத்திலிருந்து தொடங்குகிறது கதை பய்யூர் வனச்சரகத்தில் வனச்சரக அதிகாரிகள் தற்காலிக ஊழியர்களை நடத்தும் விதமும், வன பாதுகாப்பு என்கிற பெயரில் நடக்கும் சட்ட விரோத அட்டூழியங்களும் காட்டப்படுகின்றன.வனச்சரக அதிகாரிகளின் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் வாலிபராக தினேஷ் வருகிறார். இதனால் அலுவலக ரீதியான பிரச்சினைக்குள்ளான அருள்தாஸ், தினேஷைப் பழிவாங்கத் துடிக்கிறார். இங்கே உள்ளூரில் வன அதிகாரிகளுக்கும் தினேஷ் மற்றும் மக்களுக்குமான மோதல், சித்திரவதைகள் என்றால், அங்கே ராஞ்சியில் ராணுவப் பயிற்சி என்ற பெயரில் கலையரசனும் பால சரவணனும் கொடுமையான சித்ரவதைகளில் சிக்கிக் கொள்வது என்று பதைபதைப்பை ஏற்படுத்துகிறார்கள். முருகன் பாத்திரத்தில் கலையரசனும் சடையன் பாத்திரத்தில் தினேஷும்,கலையரசனின் காதலி பிரியாவாக வின்சுவும், தினேஷின் மனைவியாக ரித்விகாவும் நடித்துள்ளார்கள்.
முருகனாக நடித்துள்ள கலையரசன் காதலின் தவிப்பு தொடங்கி ராணுவ முகாமில் உயிர் தப்ப பதற்றப்படும் கிளைமாக்ஸ் வரை அந்த கேரக்டரோடு தன்னை பிணைத்துக் கொள்கிறார். சடையனாக வரும் தினேஷ் கேள்வி கேட்பவராகத் தொடங்கி ஒடுக்குதல்களை அனுபவித்துப் பிறகு திமிறி எழும் காட்சிகளில் சிங்கத்தின்
சிலிர்ப்பை கொண்டு வந்து விடுகிறார். கலையரசனின் காதலியாக வின்சு ரேச்சல் சாம், தினேஷின் மனைவியாக ரித்விகா இருவரும் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
வனச்சரக அலுவலராக வரும் அருள்தாஸ் வன்மம் நிறைந்த கண்களோடு அந்த வில்லன் பாத்திரத்தில் துல்லிய நடிப்பில் வெளிப்பட்டுள்ளார்.
சிறிய உஸ்தாத் ஆக வரும் யுவன் மயில்சாமி மிடுக்கான பார்வை விரைப்பான தோற்றம் என உடல் மொழியிலும் நடிப்பிலும் பளிச்சிட்டுள்ளார்.அமிதாப்பாக வரும் சபீரின் பாத்திரம் ஆரம்பத்தில் கலையரசனுக்கு வில்லனாக வந்து நண்பனாக மாறும் இடத்தில் நடிப்பில் கவனிக்கவைக்கிறார். பயிற்சி முகாமில் தானொரு நக்சலைட் என்று சிரிக்க வைக்கும் பால சரவணன் என்கவுண்டர் செய்யப்படுவோம் என்கிற உயிர் பயத்தில் அலறும் போது கலங்க வைக்கிறார். வேட்டை முத்துக்குமார், கவிதா பாரதி இருவருமே வில்லங்கமான வில்லன்கள்.
ராணுவப் பயிற்சியில் நடக்கும் சித்திரவதைகள் ’டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டுகின்றன. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும் ம் பின்னணி இசையும் நேர்த்தி. ‘அடியே அலங்காரி’, ’காவக்காடே’ பாடல்கள் ரசனைக் களஞ்சியம். திரைக்கதையில் பரபரப்பு, வசனங்களில் கூர்மை, பட உருவாக்கத்தில் முதிர்ச்சி என்று தன்னை வெளிப்படுத்தி ஒரு நேர்த்தியான படத்தை தந்திருக்கிறார், இயக்குநர் அதியன் ஆதிரை.
தண்டகாரண்யம், போலிகளை சுட்டெரிக்க வந்த தீப்பிழம்பு.
