திரை விமர்சனம்

தணல் – திரை விமர்சனம்

காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் அன்று இரவே ரோந்து பணிக்கு அனுப்பப் படுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயல… அந்த நபர் தப்பித்து ஓட… அவரை துரத்தியபடி ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது தான் அவர்கள் திட்டமிட்டு கடத்தப்பட்டு இருப்பது தெரிய வர,. அங்கு அஸ்வின் தலைமையிலான ஒரு குழுவினர் மிகப்பெரிய சதிதிட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் 6 பேரும் அவர்களை விசாரிக்க முயற்சிக்க, அஸ்வின் தனித்தனியாக சிக்கும் 3 காவலர்களை கொன்று விடுகிறார். அவர்களிடம் இருந்து நாயகன் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். காவலர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அஸ்வின் யார்? , அவரது சதி திட்டம் என்ன ?, இதில் சம்பந்தமே இல்லாத அதர்வா குழு எப்படி சிக்கியது? கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக சொல்வதே ‘தணல்’.

நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துணிச்சல் மிக்க போலீசாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். உயிர் பிழைப்பதற்காக வில்லன்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு முன் அங்கு நடக்கவிருக்கும் பேராபத்தை தடுக்க வேண்டும். அப்படியே நண்பர்களையும் காப்பாற்ற வேண்டும்.இந்த மூன்று நிலைகளிலும் காட்சிகளை ஜீவனுடன் வைத்திருக்கிறார்.

வில்லனாக இருந்தாலும், கதையின் நாயகனுக்கு சமமான கேரக்டர், அஸ்வினுக்கு. பிளாஷ்பேக்கில் அவரது முன் கதை நிஜமாகவே மனதை கலங்கடித்து விடுகிறது. நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா திரிபாதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், வந்தவரை நிறைவு. ஷாரா, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி, பாரத், ஷர்வா, தாஃபிக், பிரதீப் கே.விஜயன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் பொருத்தமான பாத்திரத் தேர்வில் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் கேமரா படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் உயிர் பிழைக்க ஓடிக்கொண்டே இருக்கும் நாயகர்களுக்கு இணையாக ஓடிக் கொண்டே இருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பின்னணி இசை படத்தின் பரபரப்புக்கு பக்கத் துணையாகி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ரவீந்திர மாதவா, உண்மை என்கவுண்டர் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து, விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.
அதிரடி ஆக்ஷனில் ஒரு ஆட்டம் பாம்.