திரை விமர்சனம்

மிராய் – திரை விமர்சனம்

மாயாஜாலக் கதைகள் எப் போதுமே ரசிகர்களின் கொண்டாட்டம் ஆகிவிடும். இந்த கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இப்படியான ஒரு கதையை வரலாற்று பின்னணியும் புராணமும் இணைத்து சொன்னால் அது காவியம். அப்படி ஒரு காவியம் இந்த மிராய்.  கதை சமகாலத்தில் நடக்கிறது.

பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,தற்போதைய நவீன காலகட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயல்கிறார்.

மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா புறப்படுகிறார். சர்வ சக்தியும் ஒன்றிணைந்த வில்லனை தெய்வ சக்தி துணையுடன் போரில் சந்திக்கிறான் நாயகன்.
இந்த போரில் வென்றது யார் என்பதை பிரம்மிக்கத் தக்க விதத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகன் தேஜா சஜ்ஜா, ஹனுமான் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து அவர் செய்வதெல்லாம் சாத்தியம் தான்
என்று நம்ப வைத்துவிடுகிறார். தொடக்கத்தில் அனாதையாக கிடைத்ததை உண்டு தெருவில் சுற்றித்திரிந்தவர் பின்னர் விஸ்வரூபமெடுத்து தீய சக்தியை அழிக்க மேற்கொள்கிற ஒவ்வொரு காட்சியிலும் இவரது நடிப்புக் கொடி உயரவே பறக்கிறது

வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, அலட்டாத நடிப்பில் கவர்கிறார். நாயகனுக்கு இணையாக தனது கேரக்டரில் கவனிக்கப்படுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக் நாயகனுக்கு அவன் கடமையை சொல்லும் இடத்தில் சிறப்பான நடிப்பு. நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், மற்றும் ஜகபதி பாபு, கெட்டப் சீனு பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்கள் மனதை வருடிப் போகிறது. பின்னணி இசை கதையின் வீரியத்தை காட்சிகளில் அழுத்தமாகவே பதித்து விடுகிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கதையின் பிரமாண்டத்தை அப்படியே கண்களுக்குள் கடத்தி விடுகிறார்.
கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் பங்களிப்பு இந்த பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டம் சேர்க்கிறது.

படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, புராணத்தில் கொஞ்சம், வரலாற்றில் கொஞ்சம் என்று எடுத்துக் கொண்டு கிராபிக்ஸ் உபயத்தில் புதுசாக ரசிக்கும் விதத்தில் இந்த கதையை தந்திருக்கிறார்.
மாயாஜால காட்சிகள் திரையில் இதுவரை பார்த்திராத
புதுவகை பிரமிப்பு. மிராய்,ஆச்சரியம் இணைந்த மிரட்சி.