குமார சம்பவம் – திரை விமர்சனம்
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கு அந்த முயற்சி கைகூடி வரும் நேரத்தில் எதிர்பாராத சோதனை. தாத்தாவின் நண்பராக அந்த வீட்டில் பல வருடம் இருந்து வந்த சமூக சேவகர் திடீர் மரணம் அடைகிறார்.அது இயற்கை மரணமா அல்லது கொலையா? என்று போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது.
முதல் கட்டமாக காவல் துறையின் பார்வை நாயகன் பக்கம் திரும்புகிறது. போலீசின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்க சில தடாலடி முயற்சிகள் மேற்கொள்கிறார் நாயகன். அந்த சமூக சேவகரின் விரோதிகள் யார்? அவரால் பாதிக்கப்பட்ட யார் அவரை கொல்லும் அளவுக்கு போயிருப்பார்கள்? என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பறிகிறார். இந்த முயற்சியில் அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா?அவர் நினைத்தபடி இயக்குநர் ஆனாரா? கேள்விகளுக்கான விடை எதிர்பாராத கிளைமாக்ஸ்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற குமரனுக்கு சினிமாவில் இது முதல் படம். முதல் படத்திலே எதார்த்த நடிப்பில் ரசிகர்களின் விருப்ப நாயகன் ஆகி இருக்கிறார். இயக்குநராகும் கனவில் தயாரிப்பாளர்களை தேடிப் பிடித்து கதை சொல்லும் காட்சிகளில் நல்ல நடிகருக்கான அடையாளம் தெரிகிறது. (இவரது கதை கேட்டு அந்த வீட்டு பாட்டி மண்டையை போட்டது இன்னொரு கலகலப்பு எபிசோடு.) கொலையாளியை கண்டுபிடிக்க ஆள் வைத்து விசாரிக்கும் இடங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு கியாரண்டி.
நாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணா படத்தில் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அழகாலும் நடிப்பாலும் தன்
திரைஇருப்பை தக்க வைத்துக் கொள்கிறார்.
சமூக சேவகராக
வரும்
குமரவேல் இயல்பான நடிப்பில் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறார். இவரது சமூக போராட்டங்கள் அத்தனையும் சமூகப் பார்வையுடன் கூடியவை என்பதால் அவரது நடிப்பும் அதற்கேற்ப கூடித் தெரிகிறது. தயாரிப்பாளராக வரும் லிவிங்ஸ்டன்,
நாயகனின் நண்பனாக வரும் பாலசரவணன், மாமாவாக வரும் வினோத் முன்னா, தாத்தாவாக வரும் ஜி.எம்.குமார், டூப்ளிகேட் சிபிஐ அதிகாரியாக வரும் வினோத் சாகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவா ஆனந்த், போலீஸ்காரர் டெலிபோன் ராஜ், தலைமை ஏட்டு ஆகியோரும் ஏற்றுக் கொண்ட வேடங்களுக்கு நடிப்பால் நியாயம் செய்கிறார்கள்.
அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அத்தனையும் அச்சு வெல்ல இனிப்பு.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால். சமூக சேவகரின் மரணம், அது தொடர்பான போலீஸ் விசாரணை, நாயகனை கைது செய்ய துடிக்கும் போலீஸ் அதிகாரி, சமூக சேவகரை
ஒழித்துக்கட்ட
துடித்த தொழிலதிபர்கள் பின்னணியில் கதை போனாலும், அதை சிரிக்க சிரிக்க தந்த விதத்தில் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் ஜெயித்து விடுகிறார். லஞ்ச லாவண்யத்தை சமுதாயத்தில் இருந்து அறவே ஒழிக்க போராடும் சமூக சேவகர், ஒரு நல்ல காரியத்திற்காக கையூட்டு வாங்குகிறார் என்பது அந்த கேரக்டரின் தன்மையை சிதைத்து விடாதா?
