திரை விமர்சனம்

காந்தி கண்ணாடி – திரை விமர்சனம்

பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். அதனாலேயே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது என்பதில் கவனமாக, அதாவது கறாராக இருக்கிறான்.
காதல் திருமணம் புரிந்து ஊரை விட்டு வந்த காந்தி- கண்ணம்மா தம்பதிகளுக்கு இப்போது வயது அறுபதை தாண்டுகிறது. இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் கிடையாது. அதனால் தான் என்னவோ தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பில் பொங்கி வழிகிறார்கள். மனைவி தான் தனக்கு எல்லாமே என காந்தியும், கணவரே தன் உலகம் என வாழும் கண்ணம்மாவும் ஆதர்ச தம்பதிகளாக ஊராரின் கண்களுக்கு ஆச்சரியம் தருகிறார்கள்.
இவர்களில் கண்ணம்மாவுக்கு தங்கள் அறுபதாம் கல்யாணத்தை சிறப்புற நடத்தி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு காந்தியும் உடன்படுகிறார். தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி
இவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் கேட்கிறார்.
கதிரும் ரூ 52 லட்சம் பட்டியலிட்டு பணத்தை ரெடி பண்ணுங்கள். அறுபதாம் கல்யாணத்தை ஜாம் ஜாம் என நடத்தி தருவது எனது பொறுப்பு என்கிறான்.
காந்தி பார்ப்பதோ தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை. அதிகபட்சம் கம்பெனி மூலமும் கையிருப்பு மூலமும் அஞ்சு லட்சம் வரை அவரால் புரட்ட முடியும். 50 லட்சம் புரட்டி அவர் அறுபதாம் கல்யாணத்தை எப்படி நடத்துவார் என்று அசட்டையாக அந்த காரியங்களை கதிர் கையாள…
ஊரில் உள்ள சொத்தை விற்றதன் மூலம் ரூ.80 லட்சம் புரட்டுகிறார் காந்தி. இனி அறுபதாம் கல்யாணத்தை பிரமாதமாக நடத்தலாம் பார்த்தால், அதற்கும் வருகிறது அரசு வடிவிலான ஆப்பு. ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கிறது அரசு.
இதன் பிறகு சிக்கல்களை தாண்டி காந்தி கண்ணம்மா 60-ஆம் கல்யாணம் நடந்ததா என்பது கதை.
படத்தின் நாயகன் பாலா தான் என்றாலும், கதை நாயகர்களாக காந்தி- கண்ணம்மாவாக படம் முழுக்க நிரம்பி நிற்பவர்கள் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா தம்பதிகள் தான். அள்ள அள்ள குறையாத அமுதசுரபி அவர்கள் காதல். இளமையில் பூத்த அந்த காதல், முதுமை நிலையிலும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் கூடியே தெரிகிறது.

பணத்தை மாற்றி எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று பாலாஜி சக்திவேல் நினைக்க, அதே சமயம் பணம் மாற்றுவதையும் லாப நோக்கத்துடன் பார்க்கும் நாயகன் பாலா, பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டது போல், 60 வது கல்யாணத்தை நடத்தினாரா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘காந்தி கண்ணாடி’.
நாயகனாக நடித்திருக்கும் பாலாவுக்கு நாயகனாக இது தான் முதல் படம். தொலைக்காட்சி பாலாவுக்கும், வெள்ளித்திரை பாலாவுக்கும் உருவ ரீதியாக மாற்றங்கள் தெரிந்தாலும், நடிப்பில் அவர் இன்னும் முன்னேற வேண்டும். நடனம் நன்றாக வருகிறது. அவ்வபோது தனது டைமிங் காமெடி வசனங்கள் மூலம் சிரிக்கவும்
வைக்கிறார், செண்டிமெண்ட் காட்சிகளில் மட்டும் இன்னும் கூடுதல் பிரயத்தனம் வேண்டும்.
படத்தின் உண்மையான நாயகன் காந்தியாக வரும் பாலாஜி சக்திவேல் தான். தன் காதல் மனைவி மீது அவர் காட்டும் அளவுக்கு அதிகமான அன்பு தான் படத்தின் ஒட்டுமொத்த ஜீவன். அந்தக் கண்ணம்மா கேரக்டரில் நடிப்பில் நவரசம் பிழிந்தி ருக்கிறார் அர்ச்சனா.
நாயகியாக நடித்திருக்கும் நமிதா கிருஷ்ணமூர்த்தி, காதலன் பாலாவின் சுய நலத்தை சுட்டிக்காட்டி ஆவேசமாகும் இடத்தில் நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை உறுதி செய்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்துக்கு சிறப்பான பங்களிப்பை தந்தி ருக்கிறார்கள். ஓரிரு காட்சிகளே என்றாலும் தனது முத்திரை நடிப்பை பதித்து போகிறார் ரமேஷ் கண்ணா.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் இனிமை.
எழுதி இயக்கியிருக்கிறார் ஷெரிப். காதல் திருமணங்கள் கூட விவாகரத்தில் முடியும் தற்போதைய காலகட்டத்தில், 60 வயதை தாண்டியும்,
தங்கள் காதலை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகள் வழியே இதுதாண்டா காதல் என்று சொல்ல முயன்று இருக்கிறார். திரைக்கதையில் போதிய அழுத்தமின்மையும், அர்ச்சனா தொடர்பான அந்த கிளைமாக்சும் படத்தின் மைனஸ் பக்கங்கள்.
என்றாலும் இந்த காந்தி கண்ணாடி பார்வைக்கு உத்திரவாதம்.