திரை விமர்சனம்

கெவி – திரை விமர்சனம்

மலைவாழ் மக்களின் அன்றாட அவஸ்தை தான் கதைக்களம்.

கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள ஒரு சிறு கிராமம் தான் கெவி. இன்று வரை இங்கு வாழும் மக்களுக்கு சாலை போக்குவரத்து வசதிகளோ மருத்துவ வசதிகளோ கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இவர்களின் 350 ஓட்டுக்காக மட்டுமே வந்து போகும் அரசியல்வாதிகளிடம் ஒரே ஒரு மருத்துவமனையாவது கட்டித் தாருங்கள் என்று இவர்கள் கெஞ்சியும் பயனில்லை.n ஓட்டுக்காக சரி சரி என்று தலையாட்டும் தலைவர்கள் தேர்தல் முடிந்த பிறகு அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இந்த அவல நிலை போதாதென்று, திடீர் திடீரென்று ஏற்படும் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத பெரும் சோகம் அவர்களுக்குள் நிரந்தர உறுத்தலாக இருந்து வருகிறது.

இப்படி ஐந்து பேர் அடி யோடு புதைந்து உயிரிழந்த மறுநாள் தேர்தலுக்காக போலீஸ் படையுடன் ஓட்டு கேட்டு வந்த எம்எல்ஏ வை வார்த்தைகளால் வறுத்து எடுத்து விடுகிறார்கள் மக்கள் . இதனால் ஆத்திரமாகும் போலீஸ் அதிகாரி சார்லஸ் வினோத் அவர்களை தட்டிக் கேட்க, அப்போது அவர் மீது எங்கிருந்தோ பறந்து வந்து விழுகிறது, ஒற்றைச் செருப்பு ஒன்று.  அந்த கும்பலில் இருந்த மலையன் தான் இதை செய்திருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ் அதிகாரி, பழி வாங்க முடிவெடுக்கிறார். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார்.

இந்த நேரத்தில் மலையன் சந்தையில் பொருள் வாங்க கீழே போன நேரத்தில் மனைவி மந்தாரை பிரசவ வலியில் துடிக்க, டோலி கட்டி மலைப்பாதையில் கிராமத்து மக்கள் தூக்கி வருகின்றனர். ஆறு மணி நேரம் நடந்தால் மட்டுமே கீழே உள்ள அரசு மருத்துவமனையை அடைய முடியும் என்ற நிலையில் பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடிக்கிறார். அதோடு குழந்தையை கொடி சுற்றிக் கொண்டிருப்பதால் பிரசவம் இன்னும் சிக்கலாகிறது.

மனைவி இப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியாமல் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் மலையனை சார்லஸ் வினோத் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து தாக்குகிறார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து துவைத்து உயிரோடு எரிக்க முடிவு செய்கிறார்கள். மந்தாரைக்கு குழந்தை பிறந்ததா ? மலையன் உயிர் பிழைத்தானா என்பது க்ளைமாக்ஸ். மலையனாக ஆதவன் மலைப்பிரதேச மனிதராகவே மாறி யதார்த்த நடிப்பை வழங்கி இருக்கிறார். சுத்தி வளைத்து லத்தியால் அடித்து நொறுக்கும் போலீசிடம் விட்ருங்க என்று சொல்லி கதறும் காட்சி இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறது.

மந்தாரை கேரக்டரில் நாயகி ஷீலாவைத் தவிர இன்னொரு நாயகியை நினைத்துக் கூட பார்க்கத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு நடிப்பில் உருக்கி விடுகிறார். குறிப்பாக பனிக்குடம் உடைந்த பிறகு ஏற்படும் அரை மயக்க நிலையை நடிப்பில் அப்படியே பிரதிபலித்து காட்டுவதெல்லாம் அடடா அடடா… இந்த படத்திற்காக ஷீலாவுக்கு விருதுகள் காத்திருக்கு.

மனிதநேயமிக்க இளம் மருத்துவராக ஜாக்குலின், அவரது உதவியாளர் ஜீவா சுப்ரமணியம், ஈவிரக்கமே இல்லாத மருத்துவராக காயத்ரி, அந்த ஆஸ்பத்திரி அட்டெண்டர் வரை பொருத்தமான பாத்திரத்தில் பளிச். அத்தனை வில்ல போலீசிலும் நல்ல முகம் காட்டும் ஒரு போலீஸ் மனிதநேய மாண்பாக மனம் முழுக்க வியாபித்து நிற்கிறார்.

ஜெகன் ஜெயசூர்யா வின் கேமரா இரவு நேர மலை பயணத்தை நெஞ்சுக்கு நெருக்கமாக்கி விடுகிறது. பாலசுப்ரமணியத்தின் நெஞ்சை உருக்கும் பாடல்கள் அந்த மலை மக்களின் வலி வேதனையோடு நம்மையும் இணைத்துக் கொள்கிறது.
மலைவாழ் மக்களின் தீரா சோகத்தை, அரசின் பாரா முகத்தை காட்சிப்படுத்திய வித த்தில் இயக்கிய தமிழ் தயாளன் கொண்டாடப்பட வேண்டியவர்.