திரை விமர்சனம்

ட்ரெண்டிங் – திரை விமர்சனம்

கலையரசன் – பிரியாலயா தம்பதி தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி கடனில் பெரிய பங்களா வீடு, கார் என வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் நின்று போகிறது. கடன் கொடுத்தவர்கள் வந்து மிரட்டுகிறார்கள். இந்த வேளையில் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது உள்ளிட்ட பல கண்டிஷன்களை போடுகிறார். ஒரு கட்டத்தில் தம்பதியரிடையே நடைபெறும் இந்த விபரீத விளையாட்டு அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிற அளவுக்கு போகிறது. அது எப்படி என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.

கலையரசனுக்கு இந்த கேரக்டர் அட்சய பாத்திரம் போல. அள்ள அள்ள குறையாமல் விதவித நடிப்பு வந்து கொண்டே இருக்கிறது. டாஸ்க் மூலம் மனைவியின் கடந்த காலம் தெரிந்து கொள்ளும் இடத்தில் அதிர்ச்சியை உள்வாங்கும் அந்த நடிப்பு அத்தனை அழகு. வீட்டுக்கு வந்த நண்பன் பிரேம்குமாரிடம் காதலாய் நெருக்கம் காட்ட வேண்டும் என்ற டாஸ்க்கில், அதுவும் கணவன் அனுமதியுடன் என்ற இக்கட்டான சூழலில் நாயகி பிரியா லயாவின் நடிப்பு நிஜமாகவே ஆசம்.
நாயகியின் அம்மாவாக வருபவர் ஒரு சில காட்சிகள் என்றாலும் அசத்தல். கலையரசனின் நண்பனாக வரும் பிரேம்குமாரும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். வட்டி வசூல் செய்யும் தாதவாக பெசன்ட் ரவி கொஞ்சூண்டு வில்லத்தனம் காட்டுகிறார். .பணத்தின் மீதான ஆசை ஆரோக்கியமான உறவை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைச் சமூக வலைதளப் பின்னணியில் பேசியிருப்பது திரையில் இதுவரை சொல்லப்படாத கதை என்ற விதத்தில் ஈர் க்கவே செய்கிறது. இயக்கிய சிவராஜ்க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் கூடவே சாம் சிஎஸ் இசையும், ஒளிப்பதிவும் படத்தின் பிளஸ்.