செய்திகள்திரை விமர்சனம்

சட்டமும் நீதியும் -வெப் சீரிஸ் விமர்சனம்

நீதிமன்ற வளாகத்தில் குப்புசாமி என்ற பெரியவர் தீக்குளித்து இறக்க, அவர் இறந்த பின்னணியில் காணாமல் போன அவரது மகள் வெண்ணிலா இருக்கிறாள். மகளை கடத்திப் போய் விட்டார்கள் என்று போலீசாரிடம் குப்புசாமி முறையிட, அவர்களோ புகாரை விசாரிக்காமல் துரத்தி விடுகின்றனர். இதனால் மனம்
நொந்து போகும் குப்புசாமி, கோர்ட் வளாகத்தில் அந்த விபரீத முடிவை எடுக்கிறார்.
தீக்குளித்து இறந்து போன முத்துசாமிக்கு நீதியை தேடித் தரவேண்டும் என முடிவு செய்யும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, காணாமல் போன குப்புசாமி மகள் வெண்ணிலாவை மீட்டுத் தரக்கோரி கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கிறார்.

வெண்ணிலா கடத்தப்பட்ட பின்னணியில் அந்த ஏரியா கவுன்சிலரின் மகனும் அவனது நண்பர்களும் இருப்பதால், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியும் அவரது பெண் உதவியாளரும் தொலைபேசி வழியே மிரட்டப்படுகிறார்கள்.
இந்த வழக்கில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இறந்து போன குப்புசாமியின் மகள் கடத்தப்படவும் இல்லை என்று சாதிக்கிறார் அரசு தரப்பு வழக்கறிஞர். தீக்குளித்து இறந்த குப்புசாமி மன நலம் சரியில்லாதவராக 20 ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருந்தார் என்றும், சிறு வயதில் காணாமல் போன அவரது மகள் வெண்ணிலாவை காவல்துறை அவளது தாயாரிடம் அப்போதே ஒப்படைத்து விட்டதாகவும் கோர்ட்டில் புரூப் தாக்கல்
செய்கிறார்கள்.
இந்த வழக்கில் வெண்ணிலா கடத்தப்பட்டதை நிரூபிக்க சுந்தரமூர்த்திக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காத நிலையில், படிப்படியாக அதற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கிறார் சுந்தரமூர்த்தி. ஒரு கட்டத்தில் வெண்ணிலாவையும் கண்டு பிடிக்கிறார். ஆனால் அவளோ கோர்ட் கூண்டில் ஏறி உண்மை சொல்லும் மன நிலையில் இல்லை.
இந்நிலையில் இந்த வழக்கு என்ன ஆயிற்று? தடைகளை தாண்டி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் வென்றாரா என்பது கிளைமாக்ஸ்.

வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடித்துள்ள சரவணன் இயல்பாக அந்த கேரக்டரை அணுகி இருக்கிறார். அதுவே அந்த கேரக்டரின் வெற்றியும் ஆகிவிடுகிறது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை தனது உதவியாளருடன் சேர்ந்து தேடும் இடங்கள் தொடரின் எதிர்பார்ப்புக்குரிய இடங்களாகவும் அமைந்து நம்மை கதையோடு இணைத்துக் கொள்கிறது.
அவருக்கு உதவியாளராக வரும் நம்ரிதா திரைக்கு கிடைத்த நடிப்பு நல்வரவு.
அரசு தரப்பு வழக்கறிஞராக ஆரோல் தாஸ், குப்புசாமியாக சண்முகம் பாத்திரங்களுக்கேற்ற சரியான தேர்வு. உயர் நீதிமன்ற நீதிபதிகளாக வருபவர்கள் கூட பாத்திரத்தில் தங்கள் கேரக்டரை நிஜமாக்குகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற காட்சிகளை படம் பிடித்த விதம் சாலச் சிறப்பு.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை அளவும் அழகும் இணைந்த கலவை.

பாலாஜி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். ஏழு எபிசோடுகளிலும் எதிர்பாராத திருப்பங்கள் தந்து தொடரை ரசிகனுக்கு நெருக்கமாகி இருக்கிறார். குறிப்பாக கோர்ட் சீன்கள் அத்தனை எதார்த்தம்.