ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் – திரை விமர்சனம்
32 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டீபன் பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் திரைப்படம் டைனோசர் மீதான பிரமிப்பை ரசி கனுக்குள் விதைத்தது. தொடர்ச்சியாக இதே பின்னணியில் வந்த டைனோசர்கள் கதையில் இது ஏழாவது பாகம். இந்த கதைப்படி நிகழ்காலத்தில் பூமியின் சுற்றுச்சூழல் டைனோசர்களுக்கு ஏற்ற விதத்தில் இல்லாமல் போக, தற்போதுள்ள டைனோசர்கள் கடலிலும் அடர்ந்த காடுகளை கொண்ட தீவுகளிலும் வாழத் தொடங்கி விட்டன. இதில் இன்னொரு ஆச்சரியமாக பறக்கும் டைனோசர்களும் உண்டு. மூன்று வகைகளிலும் அபாயம் இந்தப் பறக்கும் டைனோசர் தான். ஓங்கு தாங்கான அதன் உயரம், பயமுறுத்தும் தோற்றம், அதன் பார்வையில் சிக்கி விட்டால் அடுத்த கணமே அதன் வாய்க்குள் சமாதி தான்.
இப்படி உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையிலும் அதைத் தேடி பயணப்படுகிறது ஒரு குழு. தீவுகளுக்குள் இருக்கும் டைனோசர்களின் டி என்.ஏ. மூலம் மனிதர்களை இதய நோயிலிருந்து காக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படுவதாக ஒரு தகவல் உலா வர… இதன் பிறகும் கார்ப்பரேட் உலகம் சும்மா இருக்குமா…பிரபல மருந்து கம்பெனி அதிபர் மார்ட்டின் கிரட்ஸ் தனது குழுவினருடன் தீவுக்கு படகில் ரகசிய பயணம் மேற்கொள்கிறார். இந்தக் குழுவில் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்கார்லெட் ஜான்சன், தொல்லு யிரியல் ஆய்வாளர் ஜானாதன் பெய்லி, கேப்டன் மகர்ஷலா அலி ஆகியோரும் இடம் பிடித்து இருக்கிறார்கள்.
இவர்கள் செல்லும் படகு பயணத்தில் சுற்றுலா வந்த நால்வர் கொண்ட குடும்பமும் இணைகிறது. தங்கள் படகு பயணத்தின் போது கடல்வாழ் டைனோசர் ஒன்றால் இவர்கள் படகு கவிழ்க்கப்பட, கடலுக்குள் நீந்தி உயிர் பிழைக்க போராடிக் கொண்டிருந்த நேரத்தில் நால்வர் கொண்ட இந்த குடும்பம் பயண குழுவால் காப்பாற்றப்படுகிறது.
இந்த விபரீத பய ணத்தில் டைனோசர்களை சந்திக்கும் இவர்கள் அவற்றின் ரத்த மாதிரியை சேகரிக்க முடிந்ததா… டைனோசர்கள் தாக்குதலில் உயிர் பிழைக்க முடிந்ததா என்பது கொஞ்சமும் பரபரப்பு குறையாத திரைக்கதை.டேவிட் கோபின் கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கியிருக்கிறார் காரத் எட்வர்ட்ஸ். 3 டி உப யத்தில் கண்களுக்கு நெருக்கமாக வந்து போகும் டைனோசர்கள் கொஞ்சம் திகிலும் நிறைய ஜில்லும் கலந்த அனுபவம்.
ஏழாவது பாகத்திலும் தொடர்கிறது பிரமிப்பு.
